மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர்.
இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர்.
இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் அதில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி படம் குறித்துப் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்தார். அப்போது பேசுகையில், "ஒரு காட்சியில் பூத்தொட்டியை எடுத்து மேலே இருக்கிற போர்டுல நான் அடிக்கணும். அது படமாக்கப்பட்டபோது, நான் அடித்த பிறகு என் கண்ணு முன்னாடியே நாகராஜ் என்பவருக்கு தலையில் பட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்திட்டாரு. பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இது போல் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு.
படத்தில் வரும் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்க போறார்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனால் லால் சார் சூப்பரா நடிச்சிருந்தாரு. தேர்தல் காட்சிகளில் அவர் பயன்படுத்திய வண்டி உண்மையிலே எங்க அப்பா பயன்படுத்திய வண்டி. அதே போல் விஜயகுமார் பயன்படுத்திய கார் நான் பயன்படுத்தியது" என்றார்.