பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கடைசியாக '2018' படத்தில் நடித்திருந்தார். கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்துப் பேசியிருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரளா திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் டோவினோ தாமஸின் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘அஜயன்டே ரண்டாம் மோஷனம்’, 'அன்வேஷிப்பின் கண்டேதும்' என இரண்டு படங்கள் தயாராகி வரும் நிலையில், புதிதாக அகில் பால் மற்றும் அனாஸ் கான் இருவரும் இணைந்து இயக்கவுள்ள 'ஐடென்டிட்டி' படத்தில் நடிக்கவுள்ளார். இக்கூட்டணி ஏற்கனவே 'ஃபாரன்சிக்' என்ற வெற்றி படத்தைக் கொடுத்தது.
அதனால் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் முன்னணி நடிகையைக் கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடங்களுக்கு மேலாகத் திரையுலகில் இருக்கும் த்ரிஷா, இதுவரை மலையாளத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முதல் படம் நிவின் பாலி நடித்த 'ஹே ஜூட்'. இப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இரண்டாவது படமாக மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'ராம் பார்ட் 1' படத்தில் நடிக்கிறார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. டோவினோ தாமஸ் படத்துக்கு த்ரிஷா சம்மதிக்கும் பட்சத்தில் மூன்றாவது மலையாளப் படமாக அவருக்கு இது அமையும்.