Skip to main content

அடுத்தடுத்து வருகை தரும் அரசியல் தலைவர்கள்... சென்னையில் களைகட்டும் 'மார்கழியில் மக்களிசை'!

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

tn politician joins Margaliyil Makkalisai 2021

 

இயக்குநர் ப.ரஞ்சித் கலையை ஜனநாயகம் படுத்தும் நோக்கோடு ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் காலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் கிராமிய இசை கலைஞர்கள்  தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் என தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டிற்கான மார்கழியில் மக்கள் இசை 2021 நிகழ்ச்சி கடந்த 18 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது.  இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பறையடித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

 

இதனைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சமீபத்தில் நடந்த மார்கழியில் மக்கள் இசை நிகழ்வுகளில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு பறை அடித்து இசை கலைஞர்களை  மகிழ்வித்தார். இந்நிகழ்வின் நான்காவது நாளான நேற்று (28.12.2021) சென்னை ஐ.ஐ டியில் 'ஜெய் பீம்' என்ற பெயரில் அண்ணல் அம்பேத்கரின் அனைத்து பாடல்களையும் தமிழில் பாடி அசத்தினார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ச.நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசைக்கலைஞர்களை பாராட்டினார்கள். 

 

சமீபத்தில் நடந்து முடிந்த 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வுகளில் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, இசையமைப்பாளர்கள் ஜி.வி பிரகாஷ், ஷான் ரோல்டன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் ஒப்பாரி பாடல் நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆடிய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்