Skip to main content

சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு, ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன் - திருமுருகன் காந்தி 

Published on 05/02/2019 | Edited on 07/02/2019
thiru

 

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட திருமுருகன் காந்தி பேசும்போது...

"இந்த வெற்றிவிழாவிற்கு இயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புகொடி காட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் சூழலில் '96' படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் 96. படம் அற்புதமாக இருந்தது.

காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம். காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள். ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி அப்படி செய்ய முடியும்? எங்கே கோளாறு இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். இது போன்ற தகவல்கள் ஊடகங்களில் அதிகமாக வெளியாகும் சமயத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது போன்றவற்றை பேசும் '96' படம் வெளியாகியிருக்கிறது. காதல் என்பது மனிதர்களுக்குள் மட்டுமே வரக்கூடிய உணர்வு அல்ல, இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிடத்திலும் இருக்கும் அடிப்படை குணாதிசயம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தைப்போல் காதல் என்பது காலத்துடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது. காதல் என்பது காலத்தின் இனிமை, காதல் என்பது நேசத்துடன்கூடிய ஒரு உணர்வு. படத்தில் நிகழ்காலம் முழுவதும் இரவிலும், கடந்த காலம் முழுவதும் பகலிலும் நடைபெறும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.இதுவும் நன்றாக இருந்தது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார். அதை படத்தின் முதல் பாடலிலேயே தெளிவாக சொல்கிறார் இயக்குநர். காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால்அந்த ஆண் வெறுப்புக்கு ஆளாகாமல், வன்மத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையை நேசிப்பவராக, பேரன்பு மிக்கவராக மாறுவதை அந்த முதல் பாடல் எடுத்துக்காட்டும் போது நாமும் மாறிவிடுகிறோம்.

அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார். இதைத்தான் ஒரு பேட்டியிலும் சொன்னேன். இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார். இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்களோ, எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார். இப்படிபட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன்.

இன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவே இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார். அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களை போன்றவர்கள் தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது. திரிஷாவும் அற்புதமாக நடித்திருந்தார். இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது...

'இரும்பு பிசிறாக நீளும்
 நானிருக்க
 நீ செல்லும் ரயில்’

என்ற அறிவுமதியின் கவிதைத்தான் நினைவுக்கு வருகிறது.
'மல்லிகையின் வாசம்
மழையின் நேசம்
எதுவும் அதுவாக இல்லை. 
எல்லாம் அவளின் நினைவுகளாகவே இருக்கிறது”

என்ற என்னுடைய நண்பரின் கவிதையும் நினைவிற்கு வருகிறது.

இன்றைய தேதியில் செல்போன் இருப்பதால் நாம் நினைத்ததை உடனடியாக பேசிவிடுகிறோம். பிடித்ததையும், பேசிவிடுகிறோம். பிடிக்காததையும் பேசிவிடுகிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் நாம் நினைத்ததை நேரடியாக சென்று சொல்லிய அல்லது சொல்ல தவறிய அனுபவத்தை இந்த படம் அற்புதமாக பேசியிருக்கிறது. இந்த படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல் தான். நாங்கள் மனிதர்களை காதலிக்கிறோம். இயற்கையை நேசிக்கிறோம்.அதனால் போராடுகிறோம். இது தான் உண்மை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

'96' படத்தின் 2ம் பாகம் குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

96 second part movie update

 

கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். காதலர்களின் அழகான வாழ்வியலை தனது எதார்த்த நடிப்பின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து காதல் படங்களைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் வேறு மாதிரியான உணர்வுகளைக் கொடுத்து பெரும் வெற்றி பெற்றது. கோவிந்த் வசந்தா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்தவகையில் 96 படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 

 

இந்நிலையில், 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி விட்டதாகவும், இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குநரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.