இயக்குநர் லோக பத்மநாதன் இயக்கத்தில் ‘செம்பியன் மாதேவி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எம்பி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் காதல் என்பதும் ஒரு அரசியலுக்கான பேசு பொருளாக மாறியிருக்கிறது. காதலைப் பற்றியும் பேசி ஆதாயம் தேட முடியும் என்பதைத் தமிழக அரசியலில் தான் பார்க்கிறோம். அரசியலைத் தாண்டி சினிமாவிலும் நாடகக் காதல் என்ற பெயரில் அரசியலாக்கி அதையும் வணிகமாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை விடவும் கெட்டிக்காரர்கள். என் பெயரைச் சொல்லியும் பிழைக்கிறார்கள். என் பெயரைச் சொல்லி திரைப்படம் எடுத்து வணிகம் செய்வதில் அவர்களுக்கு நான் ஒரு மூலதனமாக இருக்கிறேன். காதல் என்பது காலம் காலமாக பேசப்பட்டு வருகிற ஒரு உயர்ந்த சொல். மனிதன் தோன்றிய காலத்தில் வழிநடத்துகின்ற ஒரு வலிமைமிக்க சொல்.
டீ சர்ட், ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் போட்டால் பெண்கள் மயங்கிவிடுவார்கள், அந்த டீ சர்ட் போட்டவன் பின்னாலேயே பெண்கள் போய்விடுவார்கள் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டு நாடகக் காதல் என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள். அப்படி ஒன்று இருக்கவே முடியாது. காதல், காதல்தான். நாடகம் செய்து எல்லாம் யாரும் யாரையும் ஏமாற்றிவிட முடியாது. தான் பெற்ற பிள்ளைகளையே குறைத்து மதிப்பிடுவது போல் ஆகிவிடும். யாரையோ பழிப்பதற்காக, இழிவுப்படுத்துவதற்காக நாம் பெற்ற பிள்ளைகளை கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த விமர்சனங்கள் எல்லாம் ஒரு தனி நபருக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பது ஒருபுறம் இருந்தாலும், நம் வீட்டு பெண் பிள்ளைகளை கொச்சைப்படுத்துகிற ஒன்று. அதை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.
காதல் என்பது இயல்பான ஒன்று. அதை வலிந்து உருவாக்க முடியாது. ஒருவர் சொல்லி இன்னொருவர் அதைச் செய்யவும் முடியாது. ஆக, எந்தப் படைப்பாக இருந்தாலும் தவறான தோற்றத்தை உருவாக்கக் கூடாது. காதலுக்கு எதிர்ப்பு கட்டாயமாக இருக்கும். அதன் பரிமானங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரை, இனக்கலப்பு, சாதி கலப்பு ஏற்பட்டுவிட கூடாது என்ற கருத்தியல் நிறுவப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு சாதிக்கு இடையிலான பிரச்சனை இது” என்று கூறினார்.