Skip to main content

முதலீட்டைக்கூட ஈட்ட முடியாமல் போனதற்கு யார் காரணம்? - தங்கர் பச்சான்

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
thankar bachan about nandhan and kottukkali movie

இயக்குநர் தங்கர் பச்சான் கடைசியாக கருமேகங்கள் கலைகின்றன் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நிறைய விஷயங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நந்தன் மற்றும் கொட்டுக்காளி படங்களை பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நந்தனும் கொட்டுக்காளியும்: களைகளுக்கிடையில் முளைத்த விளை பயிர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிடப்பட்டுள்ள பதிவில், “திரைப்படத் திறனாய்வு என்பது தமிழ்நாட்டில் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. திரைப்படக்கலை மக்களைச் சென்றடைந்து 110 ஆண்டுகள் கழிந்தாலும் இன்னும் கூட அதை நாம் பொழுது போக்கிற்காக நடிகர்களின் முகத்துக்காக மட்டுமே பார்க்கப்படும் கலையாக சுருக்கி வைத்திருக்கிறோம். மக்களிடத்தில் தாக்கத்தை உருவாக்கிச் சமுக மாற்றங்களுக்காக இயங்கி மக்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய திரைக்கலை தமிழகத்தில் அந்தப் பணியை செய்திருக்கிறதா? செய்திருந்தால், நடைமுறைக்கு ஒவ்வாத மக்களின் சிந்தனையை அழித்து பின்னோக்கி இழுத்துச் செல்லும் வணிகக் குப்பைத் திரைப்படங்களை மக்கள் கொண்டாட மாட்டார்கள். 

இந்த வணிகக் குப்பைத் திரைப்படங்களின் வசூல் குறித்துக் கணக்கெடுக்கும் வேலையை செய்ய மாட்டார்கள். இயற்கை, மண், மக்கள் குறித்து அக்கரை கொண்ட அரசியல்வாதிகளை, வளர்த்தெடுக்கத் தவறியதுபோல் தேர்ந்த திரைப் படைப்பாளிகளையும், படைப்புகளையும் வளர்த்தெடுக்கத் தவறி விட்டோம். சீர்கெட்டுப் போன வணிகத் திரைச் சந்தைகளுக்கிடையில் தப்பித்து ஒன்றிரண்டு தரமான படைப்புக்களும், கலைஞர்களும் உருவாவது அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் நான் கண்ட இரண்டு தமிழ்த் திரைப்படங்கள் குறித்துச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். பல குழுக்கள் பின்னாலிருந்து இயங்கி மக்களின் மூளையை மழுங்கச் செய்து பணத்தைக்கொட்டி கூட்டத்தைத் திரட்டாத திரைப்படங்கள் இவைகள்!

விடுதலைக்குப்பிறகு மக்களாட்சி முறையில் பட்டியலின மக்களுக்குக் கிடைத்த சமூக நீதியின்படி பட்டியலின சமூகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் அமர்ந்தாலும் அவர்கள் செயலாற்ற முடியாத, இந்தியாவெங்கிலும் உள்ள கள நிலையைப் பற்றி ‘நந்தன்‘ திரைப்படம் குமுறுகிறது. தனித் தொகுதிகள் உருவாக்கியும் அதிகாரத்தை அனுபவிக்க முடியாத பட்டியலின மக்களின் அவல அரசியல் நிலைமையைப் பேசுகிறது. தற்பொழுது எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசிய ‘நந்தன்’ பட்டியலின ஆதரவாளர்களாலும், பட்டியலின தலைவர்களாலும், ஊடகங்களாலும் மக்களுக்கு அறிவுறுத்தப்படாமல் அமைதி காத்ததன் காரணம் புரியவில்லை. அறமும், கடமையும் அடிப்படையாகக் கொண்ட பத்திரிக்கையாளர் இரா.சரவணன் எழுதி இயக்கி தயாரித்துள்ள இத்திரைப்படம் பின்வரும் காலங்களில் பேசப்படும் என்றாலும், இப்பொழுது முதலீட்டைக்கூட ஈட்ட முடியாமல் போனதற்கு யார்தான் காரணம்? மக்களின் பணம் ஒன்றையே குறி  வைத்து தொழில் செய்யும் நடிகர்களும்,தயாரிப்பாளர்களும் இது போன்ற சமூகத்திற்குத்  தேவையான படைப்புகளை உருவாக்க வர மாட்டார்கள். அதுதான் என்னை இதை எழுத வைத்திருக்கிறது.

நான் குறிப்பிட விரும்பும் மற்றுமொரு திரைப்படம் ‘கொட்டுக்காளி’. சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளி வினோத் ராஜ் தனது செம்மையான பாதையை மாற்றிக் கொள்ளாமல் இதே போன்ற திரைப்படங்களைப் படைத்து உலக அரங்கில் இந்தியாவின் பெயரை மேலும் மேலும் சேர்க்க வேண்டும்! இத்திரைப்படத்தைப் பாராட்டியவர்களைக் காட்டிலும் இகழ்ந்தவர்களே அதிகம். இவையெல்லாம் இதுவரை காணாத திரை மொழியில் பொறுமை இழந்த திரைப்படம் குறித்த பார்வையும், அறிவின் போதாமையையுமே காண்பிக்கிறது. இதைத் தீவிர திரைப்படங்களின் போக்கினை உணர்ந்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். வணிகத் திரைப்படங்கள் மக்களின் ரசனையை வளராமல் பார்த்துக் கொண்டதுடன் அடுத்தடுத்தத் தலைமுறைகளையும் சினிமா நடிகர்களிடம் சிக்க வைத்துவிட்டது. 

வணிகத் திரைப்படங்களை கொண்டாடிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஊடகங்களும், திறனாய்வு எனும் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களுமே திரைப்படத்தின் பொறுப்புகளையும், கடமையையும் உணராமல் மக்களை பொறுமை அற்றவர்களாக்கி திரைபடத்தின் வணிக வெற்றி குறித்தும் வசூல் குறித்தும் கவலைப்பட வைத்துவிட்டார்கள். உழைக்கும் மக்களுக்கு பொழுதுபோக்குத் திரைப்படங்களும் வேண்டும் என்பதை நான் உணராதவனில்லை. இனிமேல் மக்களின் சிந்தனைகளையும் எதிர்காலத் தலைமுறையினரையும் சீரழிக்காத நல்ல விதத்தில் பொழுது போக்கும் திரைப்படங்களை மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. களைகளுக்கு மத்தியில் பயிர்களை வளரவிடுவது, அல்லது களைகளே இல்லாத பயிர்களை வளர்த்தெடுப்பது – இதில் எது அறிவுடைமை என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்