இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கௌதம் மேனன் பேசியதாவது...
“தங்கர்பச்சான் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவர் கேட்டு என்னால் இல்லை என்று கூற முடியாது. பள்ளிக்கூடம் படத்திற்கு கேட்டார் அப்போதிருந்த சூழ்நிலை காரணமாக முடியாது என்று கூறிவிட்டேன். ஆனால், இந்தப் படத்திற்கு முடியாது என்று சொல்ல முடியவில்லை. லாக்டவுன் சமயத்தில் எனக்கு நிறைய அறிவுரை கூறினார், நிறைய பேசினார்.
இந்தப் படத்தின் கதையைக் கூட கேட்காமல் ஒப்புக்கொண்டேன். பிறகு கதையைப் படிக்கும்போது ராமநாதன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். பாரதிராஜா சார் என்றதும் எனக்கு ஒரு கதவு திறந்ததுபோல் இருந்தது. சாருடன் 20 நாட்கள் கூட இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், முன்பு அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற முயற்சி செய்தேன் என்பது அவருக்குத் தெரியாது. ஆகையால், இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன்.
இந்தக் கதை நாவலாக வர வேண்டியது; படமாக எப்படி வந்திருக்கிறது; பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்தப் படத்தில், வீட்டில் என்ன செய்கிறோமோ அதை இங்கு வந்து செய்ததுபோல் இருந்தது. நான் எப்போதும் என்னை நடிகனாக நினைத்தது கிடையாது. இப்போது இங்கு உட்கார்ந்து இருக்கும் பொழுது கூட வேறொருவர் இடத்தில் உட்கார்ந்து இருக்கிறேன் என்ற எண்ணம்தான் தோன்றுகிறது. நான் என்னை எப்போதும் இயக்குநராகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.