Skip to main content

"ஆங்கில மருந்துடன் சித்த மருந்தையும் சேர்த்து கொடுத்திருந்தால் எஸ்.பி.பி அண்ணனை எளிதாக மீட்டிருக்கலாமே..?" - தங்கர் பச்சான் கேள்வி!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
vadvas

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார். இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் கூட்டு பிரார்த்தனை குறித்தும், எஸ்.பி.பி குணமாக வேண்டியும் இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"மீண்டு வருவார்!
மீண்டும் தருவார்!!

- தங்கர் பச்சான் 

அன்றைக்கு வானொலி சொந்தமாக இருந்தாலே பெரிய காரியம்! எளிய உழவுக்குடும்பத்தில் கிராமத்து பள்ளியில் செருப்பில்லாத கால்களுடன் நடந்து சென்று படித்து கொண்டிருந்த காலங்களில்தான் அந்த இளமைக்குரல் என்னை இருகப்பற்றிக்கொண்டது. அப்போது புகழ்பெற்ற நடிகர்களின் படங்களில் டிஎம்எஸ் அவர்களின் குரல் மட்டுமே பெரும்பாலும் இருந்தது. அண்ணன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களைப்பற்றிக் கூறும்போது ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் குறித்து மட்டுமே கூறுவார்கள். “ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, பௌர்ணமி நிலவில், அழகே உன் பெயர் தானோ, தேன் சிந்துதே வானம், இயற்கை என்னும், காத்திருந்தேன் கட்டி அணைக்க, யாருமில்லை இங்கே, கண்ணனை நினைக்காத, ஓடம் கடலோடும், காதல் விளையாட, கடவுள் மீது ஆணை, கனி முத்தம் பதிந்தது, கற்பனையோ கை வந்ததோ, கேட்டதெல்லாம் நான் தருவேன், மாதமோ ஆவணி, மங்கையரில் மகாராணி, முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில், நிலவு வந்து வானத்தையே, பொன்னென்றும் பூவென்றும், சம்சாரம் என்பது வீணை, தென்றலுக்கு என்றும் வயது, தொடுவதென்ன, உள்ளத்தில் நூறு நினைத்தேன், நீயொரு ராக மாளிகை, உன்னைத்தொட்ட காற்று வந்து, யமுனா நதி இங்கே, முள்ளில்லா ரோஜா, உறவோ புதுமை...!” இவ்வாறான நட்சத்திர நடிகர்கள் நடிக்காத படங்களின் பாடல்களெல்லாம் தான் நான் அன்றும் கேட்டது! இன்றைக்கும் நாள்தோறும் கேட்டுக்கொண்டிருப்பது!

 

எம்.எஸ்.வி இசையில் சில பாடல்கள் தவிர்த்து தனித்துவமான என்றைக்கும் இளமை கொஞ்சும் இப்பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர்கள் வி.குமார், சங்கர் கணேஷ், விஜய பாஸ்கர், ஜி.கே.வெங்கடேஷ் போன்றவர்கள்தான் தமிழ்த் திரையிசையில் பெரும் பங்காற்றி இருக்கின்றார்கள். இளையராஜா வரவுக்குப்பின் ‘ஒரு நாள் உன்னோடு ஒருநாள்’ போன்ற பாடல் தொடங்கி காலங்கள் தாங்கி நிற்கும் எண்ணற்றப் பாடல்களை பாடினார். முனேற்றப்பாதையின் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு சென்று சிலவற்றைத்தவிர ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார்! எம்.கே.டி தொடங்கி டி.யே.மோதி, ஏ.எம்.ராஜா, பி.பி.எஸ், டி.எம்.எஸ் என அனைவரின் தேர்ந்த தனித்துவமானப் பாடல்களை கேட்டு வளர்ந்திருந்தாலும் எஸ்.பி.பி என் மனதில் குடி கொண்ட மாதிரி எவரும் இடம் பெறவில்லை. சி.ஆர்.சுப்புராமன், ஏ.எம்.ராஜா, எம்எஸ்வி, கே.வி.மகாதேவன், வி.குமார், இளையராஜா போன்ற இசை மேதைகள் நமக்கு கிடைத்தது போல் தான் பாடகர்களில் எஸ்பிபி அண்ணனும் கிடைத்தார். பி .சுசீலா, எஸ். ஜானகி இருவருடன் அண்ணன் பாடிய 1970-85 காலத்துப் பாடல்களில் தான் இசையை, மெட்டுக்களை, குரல்களைக் கொண்டு நம்மை வேறு உலகத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் பாடல்கள் உருவாயின.

 

எஸ்.பி.பி அண்ணனை எனக்கு பிடிப்பது போலவே என் மனைவிக்கும் மிகவும் பிடிக்கும். வெறும் பாடல்களுக்காக மட்டுமல்ல, அவரது பண்புக்காகவும், குணத்துக்காகவும் தான்! ஏழு மாதங்கள் கடந்திருக்கும் என நினைக்கிறேன்! சென்னை நேரு விளையாட்டு அரங்கில் லக்ஷ்மண் ஸ்ருதி நிகழ்த்திய இசை நிகழ்ச்சியின்போது நானும் என் மனைவியும் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவருடன்  பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்புக்கிட்டியது! எங்களுடன் வாணி ஜெயராம் அவர்களும் இருந்தது, பெருமகிழ்ச்சியாக இருந்தது. அண்ணனுடன் என் மனைவி படம் பிடித்துக்கொள்ள விரும்பியதை உணர்ந்து ஒளிப்படக்கலைஞரை அழைத்து படம் பிடிக்கச்சொன்னார். நான் இயக்கிய, ஒளிப்பதிவு செய்தப்படங்களில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றுள் தென்றல் திரைப்படத்தில் “பறை” பாடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அண்ணனும் அதைப் பெருமையாகக் குறிப்பிட்டு நினைவூட்டுவார். மருத்துவமனையில் அனுமதித்து ஒரு வாரத்திற்கு பிறகுதான் செய்தி அறிந்தேன். ஆங்கில மருத்துவத்தை அளித்தாலும் சித்த மருத்துவத்தையும் இணைத்து மருத்துவம் மேற்கொண்டிருந்தால் அண்ணனை இந்நேரம் எளிதாக மீட்டிருக்கலாமே என என் மனது சொல்கிறது!

 

திரையிசைப் பாடல்கள் மாத்திரம் இல்லாமலிருந்தால் நம் மனதில் உருவாகும் துயரங்களுக்கும், வலிகளுக்கும், அலுப்பூட்டும் வேலைகளுக்கும் மருந்தே இல்லாமல் போயிருக்கும்! காதல் சுவை ததும்பும் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் மீண்டும் இளமைக்காலத்திற்கே சென்றுவிடும் வித்தைகளை திரைப்பாடல்கள் பெற்றுள்ளன. மனம் தளரும் பொழுதும் மகிழ்ச்சி வேண்டும் பொழுதும் நாடிச்செல்லும் எஸ்.பி.பியின் பாடல்கள் இக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் இத்திரையுலகினரால் நமக்கு கிடைத்திருக்கிறது. அண்ணன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனும் செய்தியை கேட்டதிலிருந்து எதிலும் மனம் ஈடுபட மறுக்கின்றது. அதனால்தான் இந்த பதிவை எழுத வேண்டியதாயிற்று! மானுட வாழ்வில் சிலர் மட்டுமே காலங்கள் கடந்து வாழும் பெரும் பேற்றினை பெறுகின்றார்கள்! அண்ணன் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் காலம் அதைத் தந்திருக்கிறது! உலகெங்கிலுமுள்ள என்னைப்போன்றவர்கள் அனைவரும் அவர் நலம்பெற்று மீண்டு வர வேண்டி வேண்டுதல் செய்து கொண்டேயிருக்கின்றார்கள். மக்களின் வேண்டுதலுக்கு இணையாக எதுவுமில்லை என்பதை எம்ஜியார் மற்றும் ரஜினிகாந்த் அண்ணன் இருவரும் நலம்பெற்று வந்ததை மெய்ப்பித்திருக்கின்றது! அதேபோல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களும் மீண்டு வருவார் எனும் நற்செய்திக்காக நானும் காத்திருக்கிறேன்.

 

- தங்கர் பச்சான்
   21.08.2020
   சென்னை- 600032" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்