Skip to main content

“நான் மன்னிப்பு கேட்டனா..!” - அமைச்சருக்கு தங்கர் பச்சான் விளக்கம்.

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

vgvdasvsa

 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மின்சார கட்டண உயர்வு குறித்த சர்ச்சை அதிக அளவில் எழுந்துள்ளது. வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிக அளவிலான கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துவரும் நிலையில், மின்சார கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா என்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டமன்றத்தில் நிகழ்ந்த கேள்விக்கான பதிலுரையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தங்கர் பச்சான் குறித்து பதிலளித்தார். பிறகு தன்னுடைய கோரிக்கை குறித்த செந்தில் பாலாஜியின் பதில் மிகவும் தவறானது என்று தங்கர் பச்சன் விளக்கமளித்தார். இந்நிலையில் மீண்டும் மின் கட்டண கோரிக்கை குறித்து நடிகர் தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார். அதில்...

 

"எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்துவிட்டதாகவும், நான் அதற்குப் பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்டமன்றத்தில் பதில் அளித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன், ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார். எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக் கோரி அல்ல; மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான். முதலமைச்சர் இதுகுறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின்போதும் திமுக தேர்தல் அறிக்கையிலும் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கிறேன். இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டிலுள்ள அனைவரின் பிரச்சினை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வார் என நம்புகிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்