
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48) நேற்று (25-03-25) மாரடைப்பால் காலமானார். மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர் தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடிகராக நடித்தார். இடையே சமுத்திரம், மகா நடிகன், அன்னக்கொடி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பு ஷங்கரின் எந்திரன் படத்தில் மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்றி அதில் சிட்டி ரோபோவுக்கு டூப் போட்டிருந்தார் .
இயக்குநராக 'விசில்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் 2023ஆம் ஆண்டு சுசீந்திரன் கதையில் வெளியான ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில் பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருந்தார். இந்த சூழலில் அவர் திடீரென மறைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜின் உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தம்பி ராமையா பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “சினிமா என்பது கிராமத்து இளைஞர்களுக்கு அப்போது கனவு தான். ஆனால் அந்த கனவை நினைவாக்கலாம் என நிரூபித்து காட்டியவர் பாரதிராஜா. தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ரிஸ்க் எடுத்து சினிமாவில் காலூன்றி ஒரு ஆளமரமாக இருந்து அடுத்த தலைமுறைகளுக்கு முன்னுதாரனமாக இருந்தவர் பாரதிராஜா. 80 வயதை கடந்த அவர், இன்றைக்கு இழந்திருக்கிற இழப்பு என்பது மிகப்பெரிய கொடுஞ் செயல். ஒரு மாபெரும் மனிதனுக்கு மகனாக பிறந்தது மட்டும்தான் அவனுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கான காரணம் என நான் நினைக்கிறேன்.
அவரிடம் இப்ப என்னப்பா பன்ற, அடுத்து எதுவும் வேலை செய்யலையா, உங்க அப்பா பெயர காப்பாத்துலையா... இப்படி கேள்விகளை கேட்டு ஒரு பதட்டத்துக்கு இந்த சமுதாயம் அவர்களை ஆளாக்கிவிடுகிறது. அவர்கள் சராசரி மகனாக யாரிடமும் பேசவும் முடியவில்லை. அதனால் தனி அறையில் தன்னை அடைத்து கொண்டு அதனால் வரும் மன அழுத்தத்தினால் தான் 48வயதில் மறைந்துள்ளார் என நான் உணர்கிறேன். பெரிய மனிதனுக்கு பிள்ளையாக பிறப்பது இந்த சமூகத்தில் கொடுமையான ஒன்று. அது தண்டனையும் கூட. கடல் பூக்கள் படத்தில் மனோஜ் முரளியுடன் நடித்த போது, மனோஜிடம் அவ்வளவு கனவுகளும் திறமைகளும் இருக்கிறது, ஆனால் எப்படி வெளிக்கொண்டு வருவது என்பது தெரியவில்லை என முரளி சொன்னார். முரளியும் இளம் வயதிலே போய்விட்டார். மனோஜும் இளம் வயதிலே போய்விட்டார்” என்றார்.