தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேலும் தமிழ் பாடத்தில் நந்தினியை தவிர்த்து லக்ஷயாஸ்ரீ என்ற மாணவி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பலரது கவனத்தை ஈர்த்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்த லக்ஷயாஸ்ரீக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜி மாணவியை ஃபோனில் அழைத்துப் பாராட்டிய நிலையில் மாணவியின் இல்லத்திற்கு சென்று நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாணவியின் பெயரில் லட்சியம் இருக்கிறது. கண்டிப்பாக அவரது லட்சியம் நிறைவேறும் என்று நினைக்கிறேன். அவரது மேற்படிப்புக்கு என்னால் இயன்ற உதவியை செய்வதாக உறுதியளித்திருக்கிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று பலரும் சொல்லி வரும் சூழலில் தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்த லக்ஷயாவை பாராட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.
மேலும், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நிறைய நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார். குறிப்பாக நம்முடைய முதலமைச்சர் முழு மூச்சோடு இருக்கிறார். இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி அடுத்தகட்டத்திற்கு போக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார். அப்போது அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாடி பாலாஜி, "நான் முன்பு சொன்னது போல விரைவில் வருவேன். வந்தால் கண்டிப்பாக நிறைய நல்லது பண்ணுவேன். கூடிய விரைவில் அதை முறையாக அறிவிப்பேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஐடியா இல்லை. எனக்கான ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்கும் கட்சியில் பணியாற்றத் தயாராகவுள்ளேன்" என்றார்.
பாலாஜி, நித்யா என்பவரை திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். நித்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.