
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருவதால் திரையரங்குகளிலும் புதிய படங்கள் எதுவும் வெளியாகாமல் பழைய படங்களையே திரையிட்டு வருகின்றனர். இதையடுத்து தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் மட்டுமே அவ்வபோது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இனி தெலுங்கு படங்களும் தமிழ்நாட்டில் ஓடாத காரணத்தினால், சமீபத்தில் இங்கு வெளிவந்து நல்ல வசூல் பார்த்து வரும், ரங்கஸ்தலம், சல் மோகன் ரங்கா, எம் எல் ஏ ஆகிய படங்களுக்கு வசூல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.