
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் கமல் - மணிரத்னத்தின் தக் லைஃப், ஜெயம் ரவி - அறிமுக இயக்குநர் அர்ஜுனனின் ‘ஜீனி’ மற்றும் பிரபு தேவா - மனோஜின் ‘மூன் வாக்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இதில் தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய நேர்காணலில், இரவில் தூங்கி பகலில் வேலை செய்வது தனக்கு சலிப்பு தட்டுவதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு பதிலாக இரவில் வேலை செய்து பகலில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். அந்த நேர்காணலில் மும்பையின் போக்குவரத்து நெரிசல் தொடர்பான கேள்விக்கு, “நான் பகலில் ஒருபோதும் பயணம் செய்வதில்லை. நான் ஒரு ஆந்தை போல. இரவில் பயணம் செய்வேன். இரவில் போக்குவரத்து இருக்காது. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். சில நேரங்களில் நான் தர்காவுக்கு அதிகாலையிலே சென்று விடுவேன். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் முன்பே சென்று விட்டு பின்பு தூங்குவேன். தால் படம் சமயத்தில் இருந்தே இதையே தான் பின் பற்றி வருகிறேன்” என்றார். தால்(இந்தி) படம் 1999ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், “இப்போதெல்லாம் நான் இரவில் தூங்குகிறேன். இரவில் தூங்கி காலையில் எழுந்திருப்பது சலிப்பாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை முறைப்படி அது தவறான விஷயம் கிடையாது. பொதுவாக, நான் அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து காலை 7 மணிக்கு தூங்கச் செல்வேன்” என்றுள்ளார்.