
இந்த ஆண்டுக்கான 18வது ஐ.பி.எல். சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் களம் கண்டனர். முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் ஐந்து முறை அரை சதம் அடித்து இதுவரை விளையாண்ட போட்டிகளில் மொத்தம் 417 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் ஆர்ஞ்சு கேப்பை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய் சுதர்ஷனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டியர் சாய் சுதர்ஷன், நீங்க விளையாடுகிற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு. தொடர்ந்து விளையாடுங்க. உங்களை இந்தியன் ஜெர்சியில் பார்க்க காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். சாய் சுதர்ஷன் ஏற்கனவே 3 ஒரு நாள் போட்டிகளிலும் 1 டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.