
முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகச் சென்னை தி.மு.க. சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதில் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு முதல்வர் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், “முதல்வரை வாழ்த்துற அளவுக்கு எனக்கு வயசு இல்ல. ஆனால் தொடர்ந்து இந்த விழாவை அழகா நடத்திட்டு வருகிற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உண்மையிலே முதல்வருக்கு 73 வயசான்னு தெரியல. அதை திருப்பி தான் போடணும். 37 வயசு மாதிரி தான் எல்லாத்தையும் கவனிச்சிட்டு வரார். என் அப்பா இப்பவும் என்னை உடலுக்கு முக்கியத்துவம் கொடு எனச் சொல்வார். ஆனா ஸ்டாலின் சார், சைக்கிளில் போவார், ஜிம்மில் ஒர்க்கவுட் செய்வார். அதையெல்லாம் பார்க்கும் போது பயங்கர மோட்டிவா இருக்கும்.
ஒரு சீக்ரெட் சொல்லிக்கிறேன். ஸ்டாலின் சார் என்னுடைய சிவா மனசுல சக்தி படத்தை பார்த்திருக்கார். அதை ரசித்த பின்பு இந்த பட டைரக்டர் நம்ம உதயநிதியை வைத்து படம் எடுத்தால் நல்லாருக்கும் என சொல்லியிருக்கார். அதன் பின்புதான் உதயநிதியை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை ராஜேஷ் இயக்கினார். அப்போது உதயநிதி, சிவா மனசுல சக்தி படத்தை பார்த்து ரொம்ப ஊக்கமானார் என கேள்வி பட்டேன். அது எனக்கு பெருமை” என்றார்.