
இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மேலும், இந்த படத்தில் அரசியல் இல்லை என்றும் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றை சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் பிரபல பாடகரும், நடிகருமான டீஜேவுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அதை அவர் தவிர்த்துவிட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், அவரிடம் தெரிவிக்கப்பட்ட கதையில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் இடையே நடைபெற்ற போர் பேசப்பட்டிருந்தது. அது எனக்கு சரியாகப்படவில்லை. என்னுடைய அம்மா ஈழ பெண், போரின்போது அவரும் பாதிக்கப்பட்டவர். அதனால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்தார்.