யூ-ட்யூபில் இண்டிபெண்டன் மியூசிக்கின் மூலம் தமிழக இளைஞர்களிடம் பிரபலமடைந்தவர் டீஜே. இவர் இசையமைப்பில் உருவான முட்டு முட்டு, தேன் நிலவு பாடல்கள் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. இவர் தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடிக்கிறார்.
இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் அசுரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து டீஜே நம்மிடம் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் குறித்து பேசிய அதேநேரத்தில் தனது தமிழ் பற்று குறித்தும் பகிர்ந்துகொண்டார் டீஜே.
அந்த பேட்டியில், “நான் முதலில் பேசி, எழுதிய மொழி தமிழ். நான் என்றைக்கும் என்னுடைய தாய்மொழி தமிழை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. என்னோட அம்மா அப்பா அப்படிதான் என்னை வளர்த்திருக்காங்க. என்னதான் நான் லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நான் தமிழன். எங்கள் ஊரில் ஆரம்பக்கல்வியில் முதல் மொழியாக அங்கிலம் இருக்கும், தமிழை அவ்வளவாக கண்டுக்கொள்ள மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு தமிழ் என்றாலே விடுதலை புலிகள் என்றுதான் நினைப்பார்கள். அப்படி அரசியல் ரீதியாகதான் அவர்கள் பார்ப்பார்கள். தமிழன் என்றாலே அங்கு எப்போதும் கீழ்தரமாகத்தான் பார்ப்பார்கள். நான் சின்ன வயதிலிருந்து அதையெல்லாம் தாண்டி, அவமானப்பட்டு வந்ததால், நம்முடைய தாய்மொழி தமிழை பரப்ப வேண்டும் என நினைத்து நான் இசை வடிவில்அதை தொடங்கினேன். என்னுடைய அடுத்த ஆல்பம்கூட பல மொழிகள் கொண்ட ஆல்பமாக இருக்கும். அதில் மொத்தம் 12 ட்ராக்குகள் இருக்கின்றன. தமிழ் ஸ்பானிஷ், தமிழ் ஆங்கிலம் என்று இரு மொழிகள் ஒரு பாடல் என்ற ஐடியாவில் இருக்கும். இதன்மூலமாக என்னுடைய தாய்மொழியை பரப்புவேன்.” என்று கூறினார்.