18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலில் களம் காண்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க உழியர்களுக்கும் 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.