Skip to main content

ஞாபகம் வருதே, இது உன் குத்தமா என் குத்தமா... பழசைக் கிளறி மனசைத் தொட்ட படங்கள்! 

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தில் வருவது போல், நம் வாழ்வில் பின்னோக்கிப் பார்த்தால், பழைய நண்பர்களை சந்தித்தால்  கண்டிப்பாக நமக்குள் ஏற்பட்ட காதலை தாண்டாமல் செல்லமுடியாது. அப்படி பசுமரத்தாணி போல் நம் மனதில் அழியாமல் ஒட்டியிருக்கும் முதல் காதலின் நினைவுகளை சற்று அசைபோட்ட படங்கள் பெரும்பாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. அப்படி காலம் தாண்டி நம்முள் இருக்கும் காதலின் நினைவுகளை தூண்டி நம்மை நெகிழ வைத்த சில படங்களை சற்று ரீவைண்ட் செய்து பார்ப்போம்...

 

96 school



அழகி

அதுவரை ஒளிப்பதிவாளராக பெயர் பெற்ற, தேசிய விருதும் பெற்ற தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்து 2002ஆம் ஆண்டு வெளியான படம். ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் இரு கள்ளமற்ற மாணவர்களின் காதல், பிற்காலத்தில் வாழ்க்கை அவர்களை புரட்டிப் போட்ட கதையை பார்த்திபன் - நந்திதாதாஸ் வாயிலாக உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருப்பார் இயக்குனர் தங்கர்பச்சான். 1980 - 90 கால சிறுவர்கள் வாழ்வில் நடந்த காதலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் படம்.

 

alagi 1



சிறிய கிராமத்துப் பள்ளியில் படிக்கும் பார்த்திபன் - நந்திதாதாஸ் இருவரும் ஒருவர் மீது ஒருவர் இனம் புரியா அன்பை வைத்திருக்கின்றனர். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக இருவரும் பிரிந்து செல்கின்றனர். நந்திதாதாஸ் ஏழைக் குடிகாரனை திருமணம் செய்து வறுமையில் கஷ்டப்படுகிறார். பார்த்திபன் படித்து பெரிய டாக்டராகி நல்ல வசதியோடு வேறொரு பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கின்றார். அப்போது திடீரென ஒரு நாள் முன்னால் காதலியான நந்திதாதாஸை ஏழ்மை நிலையில் பார்த்துவிட்ட பார்த்திபன் நந்திதாதாஸை தன் வீட்டிற்கு அழைத்து வந்து பணிப்பெண்ணாக தன் வீட்டிலேயே தங்கவைத்து விடுகிறார். இதன் பின்னர் பார்த்திபன் குடும்பத்தில் நந்திதாதாஸ் வருகையால் ஏற்படும் சலனங்களை அவர் எப்படி கையாள்கிறார். நந்திதாதாஸை கைவிடவும் முடியாமல், அரவணைக்கவும்  முடியாமல் தவிக்கும் தவிப்பை அப்படியே கண்முன் நிறுத்தி அப்போதைய நடுத்தர வயதுக்காரர்களின் பழைய காதல்  நினைவுகளை தூண்டிவிட்டார் இயக்குனர் தங்கர்பச்சான்.

 

alagi 2



நல்ல வசதியுடன் வாழ்ந்த நந்திதாவை மழைக்கு ஒதுங்க இடம் தேடும் ஏழை விதவையாக பார்த்திபன் சந்திக்கும் அந்தத் தருணம் இளையராஜாவின் குரலில் 'உன் குத்தமா என் குத்தமா' பாடல் பலரது இதயங்களில் இரும்பை வைத்து அழுத்தியது. விடலைப் பருவத்தில் விளக்கொளியில் 'ஒளியிலே தெரிவது தேவதையா' என தன் காதலியை சந்திக்கும் சண்முகமாய் ரசிகர்கள் அனைவரையும் மாற்றினாள் அந்த அழகி. பின் தன் பாசத்துக்குரிய தோழன் வீட்டிலேயே பணிப்பெண்ணாக இருக்கும்போது பழக்கதோஷத்தில் 'சண்முகம்' என்று கூப்பிடுவதும் அவன் மனைவிக்கு அதற்காக சங்கடப்படுவதும் என அழகி ஒரு யதார்த்தக் கனவு. இவையெல்லாம் மீம்ஸ் காலத்து காதலர்கள் அறியாத கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ். முன்னணி நடிகர்கள், பரபரப்பான திரைக்கதை என அப்போதைய ட்ரெண்டில் எதுவுமே இல்லாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கி கொண்டாடினர் தமிழ் சினிமா ரசிகர்கள்.

ஆட்டோகிராப்

2004ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் தயாரித்து, இயக்கி, நடித்த படம். வாழ்வின் பள்ளிக்காலம் முதல் கல்யாணம் வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் காதலை எதார்த்தமாக சொன்ன படம். சேரனுக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்கு தன் பள்ளிப் பருவ காதலியான மல்லிகா, கல்லூரிப் பருவ காதலியான கோபிகா ஆகியோருக்கு அழைப்பிதழ் வைக்கச் செல்லும் சேரனின் பிளாஷ்பேக்காக கதையை உருவாக்கியிருப்பார் சேரன். இப்படத்தில் வரும் ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வை அப்படியே பிரதிபலிப்பதுபோல் அழகாக காட்சிப்படுத்தி நெகிழ வைத்திருப்பார் சேரன். அப்படி எதார்த்தமாக காதலை வெளிப்படுத்தியதாலேயே இப்படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன. மேலும் இப்படத்தின் தாக்கம் மலையாள சினிமா வரை சென்று இப்படத்தின் கதையை தழுவி கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'பிரேமம்' படம் மாபெரும் வெற்றிபெற்றது.

 

autograph



அதுவரை வாழ்க்கையில் ஒரே காதல்தான் இருக்கவேண்டும், முதல் காதல் மட்டுமே உண்மையானது என்றெல்லாம் புனிதப்படுத்தப்பட்டிருந்த காதலை விரசமில்லாமல் நடைமுறைக்குக் கொண்டுவந்த  இந்தப் படம், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தமிழகத்தில் உருவாக்கிய அலை மிகப்பெரியது. பல இளைஞர்கள் தங்கள் திருமணத்துக்கு பழைய காதலிகளை, தோழிகளை தயக்கமின்றி அழைப்பது, நாஸ்டால்ஜியா என்னும் பழைய நினைவுகளை திரும்பிப் பார்ப்பது, ஸ்லாம் புக்குகளுக்கு மதிப்பு அதிகரித்தது, இயக்குனர்கள் ஹீரோக்களாவது என பல விஷயங்கள் இந்தப் படத்திற்குப் பிறகு அதிகரித்தன. 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே' பாடல் ஒவ்வொருவரையும் உள்ளத்தினடியில் இருந்து உச்சி வரை சிலிர்க்க வைத்தது. நெய்க்காரப்பட்டி, கேரளா, சென்னை என மூன்று இடங்கள், மூன்று தற்பவெப்ப சூழ்நிலைகளை காட்சிப்படுத்தி ஒரு காட்சி விருந்தாகவும் அமைந்தது ஆட்டோகிராஃப். 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் நம்பிக்கையை ஏற்படுத்த, 'கிழக்கே பார்த்தேன் விடியலாய் தெரிந்தாய் அன்புத் தோழி' பாடல் நட்பின் மதிப்பை உயர்த்தியது. இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்று தங்கள் ஸ்லாம் புக்குகளை திருப்பிப்பார்க்காதவர்கள் குறைவு.



வாரணம் ஆயிரம்
 

surya



கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம். ராணுவ மேஜராக வரும் நடிகர் சூர்யாவின் அப்பா சூர்யா இறந்த செய்தி சூர்யாவிற்கு வருகிறது. மனம் உடைந்த சூர்யா, வீடு நோக்கிய பயணத்தில் தன் தந்தையின் நினைவுகளை அசைபோடுகிறார். அப்பா சூர்யா தன் இளைஞர் பருவத்தில் நடிகை சிம்ரனை காதிலிக்கிறார். இதை அழகான வின்டேஜ் காதலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். பின்னர் மகன் சூர்யாவின் பள்ளிப் பருவ காதல், கல்லூரிப் பருவ காதல், மற்றும் திருமணம் என ஒவ்வொரு காலகட்டத்தின் நகர வாழ்க்கை மாடர்ன் காதலை கவித்துவமாய் காட்சிப்படுத்தி ரசிக்கவைத்திருப்பார் இயக்குனர் கெளதம் மேனன். இதில் வரும் காதல் காட்சிகளும் நம் வாழ்வின் கடந்த காலங்களை அழகாக நினைவுபடுத்தியிருக்கும். சிட்டியில் வாழ்ந்தவர்களின் சிறு வயதை நினைவுபடுத்தியது வாரணம் ஆயிரம். தந்தை- மகன் உறவு, காதலுக்காக எவ்வளவு தூரம் வரையும் பயணிக்கலாம் என்ற எண்ணம், காதல் தோல்வியில் இருந்து போராடி மீள்வது என இந்த ஒரு படம் ஒரு முழு வாழ்வின் அனுபவத்தை தந்தது. இந்தப் படம் வந்தபின் கிட்டார் பயிற்சிக்கு டிமாண்ட் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் '96' நம் பால்ய நினைவுகளை திரும்பத் தந்து நம்மை மகிழ, நெகிழ, அழுக, சிரிக்க வைக்கும் ஒரு படம் என்று பார்த்தவர்கள் கூறுகிறார்கள். எத்தனை முறை எடுக்கப்பட்டாலும் காதல் என்பதும் குழந்தைப் பருவ நினைவு என்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும் தீராத பொக்கிஷம் போன்றது. அதை சரியாக தோண்டி எடுக்கும் படங்கள் பெருவெற்றி பெறும். அந்த வரிசையில் இணைந்திருக்கிறது 96.   

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.