கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்தியா, சீனா மோதலையடுத்து இந்திய அரசு 'டிக்டாக்' உள்ளிட்ட சில சீன செயலிகளுக்கு முதற்கட்டமாக தடை விதித்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்ததாக விளக்கமும் அளித்தது. மேலும் சில செயலிகளை தடை விதிப்பது குறித்து விவாதித்து வருவதாகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பப்ஜி மற்றும் சீன செயலிகள் உள்பட 118 செயலிகள் மீதான தடை அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் அறிவழகன் ட்வீட் செய்துள்ளார். அதில், “பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் சிறந்த முடிவு. பாதுகாப்புக் காரணங்களைத் தாண்டி, பல்வேறு புதுமையான விஷயங்களைச் செய்யவிடாமல், குழந்தைகள், இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பப்ஜி முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைத்துப் பெற்றோரும் இதை வரவேற்பார்கள். இந்தியாவில் உருவான பப்ஜி என்று எதுவும் வராது என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.