இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சியை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பார்த்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், படக்குழுவை வெகுவாக பாராட்டினார்.
இந்த நிலையில் படம் குறித்து சீமான் ‘பல்சுவை திரைப்படம்' எனப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு, தம்பிகள் பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ள அழுத்தமான வசனங்கள் கூடுதல் பலம் சேர்க்கிறது. தம்பி அமீர் நடித்துள்ளார் என்று சொல்வதை விடக் கதையின் நாயகன் பாண்டியனாகவே வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதகளப்படுத்தியுள்ளார். விறைப்பான தோற்றத்துடனும் கடுமையான முக பாவனைகளுடனும் திரையில் இதுவரை நான் கண்ட அமீரிலுருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறொரு பரிணாமத்தில் தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். காதல், நகைச்சுவை, சண்டை காட்சிகள் என அனைத்திலும் ரசிக்க வைக்கும் தமிழ்த்திரையுலகின் புதிய நாயகனாக தம்பி அமீர் உருவெடுத்துள்ளது வியக்க வைக்கிறது. கதையின் நாயகி சாந்தினி தமது வெகு இயல்பான நடிப்பினால் ஈர்க்கிறார்.
நகைச்சுவை கலந்த அரசியல் படமாக மட்டுமில்லாமல், அப்பா மணிவண்ணன் இயக்கத்தில் உருவான 'அமைதிப்படை' திரைப்படம் போல இத்திரைப்படமும் மக்களுக்குத் தேவையான ஆழமான செய்திகளைக் காட்சிகளின் மூலம் உணர்த்துவது பாராட்டுக்குரியது. அரசியல் திரைக்கதை என்றாலும் படம் முழுக்க நிறைந்து நிற்கும் காதல் மனதிலும் நிறைந்து ரசிக்கும்படியான காதல் காட்சிகள் காண்பவர் கண்களைக் கவர்கிறது. அண்மைக்காலங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்த்திரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல், அரசியல், நகைச்சுவை என பல்சுவை படமாக மிளிர்கிறது 'உயிர் தமிழுக்கு' திரைப்படம்.
அன்புச்சகோதரர் வித்யாசாகரின் வித்தியாசமான இசையும், அன்புத்தம்பிகள் கவிஞர் பா.விஜய் மற்றும் சினேகனின் பாடல்வரிகளும் மனதை வருடுகிறது. சிறப்பான படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. மறைந்த சகோதரர் மாரிமுத்துவின் அண்ணன் ஆனந்தராஜ். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர், ராஜ் கபூர். ரவி வெங்கட்ராமன், சுப்ரமணியசிவா, ராஜசிம்மன். சரவண சக்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இத்திரைப்படம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுமென உறுதியாக நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.