இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நக்கீரன் ஸ்டூடியோஸ் யூடிப் தளத்தில் படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவரிடம், சமீபத்தில் அவருக்கு பிரச்சனை ஏற்பட்ட போது, அவரது நண்பர்கள் குரல் எழுப்பியது தொடர்பாக கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், “மதுரையிலிருந்து வந்ததால் இதைத் தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் எனத் தோணவில்லை. ஆனால் இந்த இடத்தில் மதுரையை சொல்ல வேண்டியிருக்கிறது. இதனால் மதுரையை புகழ் பாடுகிறேன் என மற்றவர்கள் நினைப்பாங்க. எனக்கு இது எதுவுமே புதுசு கிடையாது. அங்கு வளர்ந்ததே அப்படித்தான். இதைவிட கூடுதலாகவும் பார்த்துருக்கேன். இந்தத் துறையில் அப்படி யாரும் இல்லை என்பதுதான் இங்க பிரச்சனை. எல்லாமே சுயநலவாதியாக இருக்கிறாங்க, நம்ம வேலையில பாதிப்பு வந்துருமோ எனப் பயப்படுறாங்க. அப்படி பயப்பட தேவையில்லை. உங்க குடும்பம் சார்ந்த ஒருவருக்கு சிக்கல் என்றால் அவருக்காக போராடித்தான் ஆக வேண்டும். நட்பை குடும்பம் சார்ந்த உறவாக நினைக்காததினால் வரமாட்டேக்குறாங்க. நினைத்தவர்கள் வந்துடுறாங்க.
சசிகுமாருடைய உறவினர் அசோக் மரணத்திற்கு, நான் நிற்கும் போது எல்லாரும் எப்படி இவர் வரமுடியும் எனப் பார்த்தாங்க. மிகப்பெரிய ஃபைனான்சியர், அரசியல் பின்புலத்துடன் இருக்கும் நபரை, களத்தில் எதிர்த்து நிற்கிறார் எனவும் கேட்டாங்க. எனக்கு அவர் யாரு, பின்புலம் என்ன என்பதுலாம் எனக்கு தோணவில்லை. மரணமடைந்தது என் தம்பி. என்னை அண்ணன் என அன்பாக அழைத்தவன். என்னுடைய உறவு, என்னுடைய பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சியவன். என் குடும்பத்துக்கு எதாவதுன்னா ஓடிவந்து நின்னவன். உங்களுக்குத்தான் அவன் இணைத்தயாரிப்பாளர் அசோக் குமார். எனக்கு அவன் தம்பி. அவனுடைய மரணத்தில் நீதி கேட்டு நிற்பதில் எனக்கு என்ன சங்கடம் இருக்கு. அதனால் அங்கு நான் வந்து நிற்கிறேன்.
நான் யாரை எதிர்க்கிறேன் என்பதை விட யாருக்காக வந்து நிற்கிறேன் என்பதை தான் பார்ப்பது. என்னுடைய நண்பர்கள் இன்னமும் அப்படி தான் ஊரில் இருக்கிறாங்க. ஃபோன் போட்டு வர சொன்னா உடனே வந்திடுவாங்க. ஏன் எதுக்குன்னுலாம் கேட்க மாட்டாங்க. அப்படி வளர்ந்ததினால் அதிலிருந்து வெளியில் வரமுடியவில்லை. இந்தத் துறை வேறமாதிரியாக இருக்கலாம். இங்க இருக்கிற மனிதர்கள், வேறுமாதிரியான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். அதற்காக நான் எந்த கலாச்சாரத்தில், பண்பாட்டில் வளர்ந்தேனோ அதிலிருந்து வெளியில் வரமுடியாது. அப்படிதான் நான் போயிருக்கேன், அவுங்களும் வந்திருக்காங்க. சர்வதேச குற்றப் பின்னணியில் இருக்கும் ஒரு வழக்கில், என்னை தொடர்பு படுத்தி பேசும்போதுக்கூட பொண்வண்ணன், கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன், சினேகன் போன்றவர்கள் வருகிறார்கள். இது போன்ற நட்பைப் பெற்றிருப்பதால் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.