இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தது படக்குழு. அப்போது அமீரிடம் படத்தில் மக்கள் போராளி என அவரது பெயர் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த அமீர், “எனக்கும் அந்தப் பட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இதை அவரிடமே சொல்லிவிட்டேன். பட்டங்களும் விருதுகளும் தகுதியின் அடிப்படையில் வர வேண்டும். நம்மளாக காசு கொடுத்து வாங்க கூடாது. எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம் என்ற பட்டம் ஏற்புடைய பட்டம். ஆனால் புரட்சி தலைவர் என்ற பட்டம், ரசிக்கப்பட்ட பட்டம் ஏற்புடையதா எனக் கேட்டால், அது பெரிய கேள்விக் குறிதான். புரட்சி என்பது சாதரணமானது கிடையாது. இந்த உலகை புரட்டி போட்ட புரட்சியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
நாலு படம் எடுத்தேன், ரெண்டு படம் நடிச்சேன், அதனால் நான் போராளி என்றால், அப்போது கூலி ஊதியம் கேட்டு மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் தாமிரபரணியில் இறந்தார்களே அந்தப் போராளிகளை எப்படி பார்ப்பது. இப்போது தூத்துக்குடியில் உயிர் நீத்தார்களே 13 போராளிகள் அவர்கள் யாரு, இந்த மன்ணை மீட்பதற்காக வெள்ளையர்களிடம் உயிர் நீத்தார்களே அவர்களெல்லாம் யார், அதனால் போராளி என்பது பெரிய வார்த்தை. அதைக் காலம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஆனால் மக்களுக்கான போராட்டத்தில் களத்தில் இருக்க வேண்டுமென்றால் இருக்க வேண்டும். இந்தச் சினிமா வெளிச்சம் எங்கள் மீது படும்போது, எங்களுடைய சுய புராணத்தையோ, பெருமையையோ, வாழ்வை வளர்க்கும் விஷயங்களையோ செய்யக் கூடாது. இந்த வெளிச்சம் கிடைத்திருப்பது சினிமாவினால்தான். அதைகொடுத்தது மக்கள். அவர்களுக்குத்தான் அதை திருப்பி கொடுக்க வேண்டும். அந்த எண்ணம் எப்போதும் எனக்குள் இருக்கும். அதனால் கடைசி வரைக்கும் மக்களோடு இருப்போம்” என்றார்.