Skip to main content

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அங்கீகாரம் பெறும் தமிழ்க்குறும்படம்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

sweet briyani

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து இந்திய சர்வதேச திரைப்பட விழாவை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள படங்களின் பட்டியல் நேற்று (05.11.2021) வெளியாகியது. மொத்தம் 25 திரைப்படங்களும், 20 குறும்படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழில் இருந்து வினோத் ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படமும், ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய 'ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் தேர்வாகியுள்ளது. இதில், வினோத் ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் வேறொரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவந்த இப்படம், பின்னர் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டது. இத்திரைப்படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கும் இந்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

தமிழில் இருந்து தேர்வாகியுள்ள குறும்படமான 'ஸ்வீட் பிரியாணி'யை ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்க, பிராங்க் புகழ் ஆர்.ஜே. சரித்திரன் நாயகனாக நடித்துள்ளார். உணவு டெலிவரி பாயின் ஒருநாளை அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் பேசுகிறது 'ஸ்வீட் பிரியாணி'. இக்குறும்படத்தில், சென்னை பெருநகரத்தில் படிந்துள்ள சாதிய ஆதிக்க மனநிலையையும் இயக்குநர் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

முன்னதாக இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய 'டூ லெட்' திரைப்படமும் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்