ஹீரோ ஹீரோயின், குத்துப் பாடல்கள், இரண்டாம் பாதியில் ஒரு மெலடி, பஞ்ச் டயலாக்ஸ், மாஸான பைட் சீக்குவன்ஸ்... இதெல்லாம் ஒரு படத்தில் கட்டாயம் இருக்கவேண்டும், அப்பொழுதுதான் அது சுவாரசியமாக இருக்கும், முக்கியமாக வெற்றி பெற முடியும் என்ற காலத்தைத் தாண்டி தமிழ் சினிமா வெகு தொலைவு வந்துவிட்டது ஒரு மகிழ்ச்சியான விஷயம். அந்த விஷயங்களெல்லாம் தவறானவை அல்ல, என்றாலும் அவை இல்லாமல் படம் வெற்றி பெறாது என்ற சூழலும் நம்பிக்கையும் தவறானது. இந்த புதிய அலையில் அடுத்த படமாக ஒரு முயற்சி 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'.
விக்ராந்த், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது குழந்தையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாததால் நண்பர்களான சுசீந்திரன் மற்றும் இருவருடன் சேர்ந்து கோவையில் ஒரு பெரிய வங்கியில் கொள்ளை அடித்துவிட்டு அங்கு இருக்கும் சிலரை கொன்றுவிட்டு ஆர்.எஸ்.புரம் என்ற ஏரியாவிற்குள் தப்பி சென்று ஒளிந்து கொள்கின்றனர். இவர்களை பின்தொடர்ந்து கொண்டே கமிஷ்னர் மிஷ்கினின் போலீஸ் படையும் ஏரியாவுக்குள் புகுந்து அவர்களை சுற்றி வளைக்கிறது. இதற்கிடையே அதே பகுதியில் தங்கியிருக்கும் சில தீவிரவாதிகள் குண்டு வைத்து அந்த இடத்தை சின்னாபின்னமாக்க திட்டமிடுகின்றனர். இதற்கு நடுவில் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் விக்ராந்த், சுசீந்திரன் திருட்டு கும்பலுக்கும், போலீசுக்கும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதையடுத்து இந்த துப்பாக்கிச்சூட்டில் யார் வென்றார்கள், திருட்டு கும்பல் போலீஸ்காரர்களிடம் பிடிபட்டார்களா, தீவிரவாதிகளின் சதி திட்டம் என்னவானது என்பதே பரபரக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் கதை.
'வந்தமா... சட்டுபுட்டுன்னு வேலையை ஆரம்பிப்போம்' என்பதுபோல் முதல் ஷாட்டில் இருந்தே கதை ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் சின்ன சின்ன திருப்பங்களோடு செல்லும் படம் போகப்போக வேகமெடுக்கிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படுத்தாமல் பரபரவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று ஒரு மிகப்பெரிய திருப்பத்தோடு முடிந்து கைதட்டல்கள் வாங்கியுள்ளது. முக்கியமாக எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத காட்சிகள் என எதையுமே வைக்காமல் மிகவும் புத்திசாலித்தனமாக கதையை நகர்த்தி உள்ளார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதேபோல் படத்தில் பயன்படுத்திய அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது கதையோட்டத்திற்கு வலு சேர்க்கிறது. போகிற போக்கில் சுட்டுக்கொண்டே போவதும் அதுல்யா பாத்திரம் கொஞ்சம் அதிகமாகப் பண்ணுவதும் சற்றே உறுத்துகின்றன.
விக்ராந்த், கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து ரசிக்க வைத்துள்ளார். இவருக்கும் குழந்தைக்கும் உண்டான நெகிழ்ச்சியான காட்சிகளில் இருவரும் நன்றாக ஸ்கோர் செய்கின்றனர். சுசீந்திரனுக்கு அதிகம் வசனம் இல்லை, நடிப்பதற்கும் பெரிய வாய்ப்புகள் இல்லை, இருந்தும் கவனம் ஈர்த்துள்ளார். படத்தின் இன்னொரு நாயகனாக வரும் மிஷ்கின் படத்தின் ஜீவனாக இருந்து கரை சேர்த்துள்ளார். இவரின் அனுபவமிக்க நடிப்பும், துடுக்கான செயல்களும் கதையோட்டத்திற்கு நன்றாக உதவி அயர்ச்சியை தவிர்த்து உள்ளன. லோக்கல் பெண்ணாக வரும் அதுல்யா பாத்திரம், 'கொஞ்சம் ஓவரோ' என்று தோன்ற வைத்தாலும் ரசிக்க வைத்துள்ளார்.
ஜோக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசையும், ராமாராவின் படத்தொகுப்பும் திரைக்கதையின் வேகத்தை நன்றாக கூட்டி உள்ளன. குறிப்பாக படத்தொகுப்பாளர் ராமாராவ் படத்தின் திரைக்கதையின் முக்கியத்துவத்தை அறிந்து கத்திரியை நன்றாக உபயோகப்படுத்தியுள்ளார். சந்துகளுக்குள் புகுந்து விளையாடும் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் வேகமெடுத்து இருக்கின்றன.
படத்தில் சில பல தொய்வுகள் இருந்தாலும் இறுதியில் வரும் திருப்பம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் வலிமையுடன் இருப்பது சிறப்பு.