'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து ‘மாநாடு’ படத்தில் இடம்பெற்றுள்ள 'மெஹெரசைலா' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் பாடல் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்துகொண்டனர். அதில்...
“ஒரு நல்ல படம் தனக்கு தேவையானவற்றைத் தானே தேடிக்கும்னு சொல்வாங்க. அது இந்த ‘மாநாடு’ படத்துக்குப் பொருந்தும். இந்தக் கதையை சொல்றதுக்கு முன்னாடி ‘எஸ்டிஆரின் மாநாடு’ அப்படின்னு ரெண்டே வார்த்தைதான் வெங்கட் பிரபு எங்கிட்ட சொன்னார். அதுக்கப்புறம்தான் கதையைத் தாமதமாகச் சொன்னார். இந்தப் படம் ஆரம்பிக்க தாமதமான சமயத்துல பல நெகடிவ் விஷயங்கள் பேசப்பட்டாலும், இந்தப் படம் தள்ளிப்போனதால பல நன்மைகள் நடந்திருக்கு. சிம்பு வெயிட் லாஸ் பண்ணினார். எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்துக்குள்ள வந்தார். சிம்பு தன்னைப் பத்தி பேசப்பட்ட அத்தனை தவறான விஷயங்களையும் அடிச்சு காலி பண்ணிட்டார். மற்ற படங்கள்ல கல்யாணியைப் பார்த்ததுக்கும் இந்தப் படத்துல பார்க்குறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. ஒவ்வொருநாளும் ஸ்பாட்ல கூடவே இருந்துருக்கேன். அத்தனை பேரோட உழைப்பையும் நேர்ல பாத்துருக்கேன். படம் முடிஞ்சு பார்க்கும்போது நாம உழைச்ச உழைப்பு வீணாகல அப்படின்னு ஒரு திருப்தி வந்துச்சு. சிம்பு - வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே இது பெரிய படமா இருக்கும்” என்றார்.