
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இதில் 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
இந்தநிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி. ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை ‘மிக மிக அவசரம்’ படம் மூலம் கண்முன் நிறுத்திய சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலைத் தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. இந்நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி. விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளன.