மலையாளத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதே ஆண்டில் பாஜகவில் இணைந்து தற்போது அதில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சத்யஜித்ரே திரைப்பட பயிற்சி மையத்தின் தலைவராக 3 வருட காலத்திற்கு சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பயிற்சி மையத்தின் மாணவர்கள், சுரேஷ் கோபி தலைவராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுரேஷ் கோபி பாஜகவுடனும், இந்துத்துவா கொள்கைகளுடனும் நெருக்கம் வைத்திருப்பதால், அவரது நியமனம் எங்களை கவலைகொள்ளச் செய்கிறது. இந்தியாவின் மதச்சார்பின்மையை அச்சுறுத்தும் வகையில் அவர் பிரிவினைவாத கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒருவர் ஒரு கட்சியுடன் கொண்டிருக்கும் நெருக்கத்தால், குறிப்பாகப் பிரிவினைவாத கொள்கைகள் கொண்ட ஒரு கட்சியுடன் கொண்டிருக்கும் நெருக்கத்தால், எங்கள் பயிற்சி மையம் (SRFTI) உயர்த்திப் பிடிக்கும் நடுநிலைமையையும், கலை சுதந்திரத்தையும் சமரசம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.