கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக் கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. பின்னர் வனத்துறையினரால் அந்த யானை கைப்பற்றப்பட்டு, காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளது. அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விலங்குகள் நல வாரியமான பீட்டா இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில்,
''பீட்டா இந்தியாவின் அவசரகால பதிலளிப்பு குழு கேரள வனத்துறையின் மூத்த வன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. அந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வார்கள் என்று நம்புகிறோம்'' என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்தப் பதிவை கவனித்த பாலிவுட் நடிகை சன்னி லியோன், ''இதைச் செய்தவர்கள் விரைவாக நீதி கிடைக்க கொண்டு வரப்படுவார்கள். மேலும் இவர்களுக்குத் தண்டனைக்கு மேல் உளவியல் சிகிச்சை பெறுவார்கள் என்று நம்புகிறேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தக் கம்பீரமான உயிரினம் மனித அரக்கர்களால் கொல்லப்பட்டுள்ளது'' என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.