Skip to main content

"சந்தானம், நக்மாவால் எனது ஆசை நிறைவேறாமல் போனது" - சுந்தர் சி பளீச்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

sundar c talk about santhanam and nagma Coffee With Kadhal Audio and Trailer Launch

 

இயக்குநர் சுந்தர் சி, ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

 

இதனையொட்டி நேற்று நடைபெற்ற இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர் சி, "நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்க வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

 

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

 

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்

 

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான் டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம். அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம்தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம். நானும் யோகிபாபு பேசிக்கொள்ளும் போது கூட அந்த குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்

 

டிடி(திவ்யதர்ஷினி) படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்