'துரோகி ' படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சூரரைப் போற்று' படம் 68வது தேசிய விருது விழாவில் 5 தேசிய விருதுகளை வாங்கியது. இப்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தமானார். இப்படம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து சுதா கொங்கரா, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளதாகவும் அதில் சூர்யா அல்லது அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சுதா கொங்கரா படம் குறித்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் கார்த்திக் கவுடா ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "நாங்கள் சுதா கொங்கராவின் இரண்டு ஸ்கிரிப்ட்களை பார்த்து வருகிறோம். அந்த இரண்டு படங்களும் தமிழ்ப் படங்களாக இருக்கும். ஆனால் அந்தப் படங்கள் பயோகிராஃபி இல்லை; உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.