ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது இவரும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில், “1999ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை நானும் என்னுடைய டீமும் படித்து பார்த்தோம். அந்த உண்மைச் சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்த கதையை எழுதினோம். சிறை கதையாக இருப்பதால் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளிவந்த கமல்ஹாசனின் விருமாண்டி மற்றும் வெற்றிமாறனின் வடசென்னை ஆகிய படங்கள் சொர்க்கவாசல் படத்தை விஷுவலாக காட்ட இன்ஸ்பிரேஷனாக இருந்தது. ஆடியன்ஸுக்கு புதுமையான விஷயங்களை படத்தில் காட்ட முயற்சித்துள்ளோம். டீசரில் காண்பித்த கதாபாத்திரங்களைத் தாண்டி இன்னும் சில கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். கதை எழுதுவதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். சின்ன காட்சியில் சில கதாபாத்திரங்கள் வந்தாலும் படத்தின் கதையில் அவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அந்தந்த கதாபாத்திரத்தின் தொடக்கமும் முடிவும் சரியான விதத்தில் இருக்கும். அதற்காகக் கதை எழுதுவதில் தனி மெனக்கெடலை கொடுத்துள்ளோம். சிறையில் ரவுடிகள் மட்டும் இருக்க மாட்டார்கள் சில அப்பாவி மக்களும் தவறான வழக்கில் உள்ளே சென்றிருப்பார்கள். அவர்களையும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.
எனக்கு இது முதல் படமாக இருந்ததால் கஷ்டமாக இருந்தது. ஆனால் இயக்குநர் பா. ரஞ்சித்துடன் இருந்து இரண்டு வருடம் தொழில் கற்றுக்கொண்டு அதை என்னுடைய படத்தில் எப்படி வெளிப்படுத்தலாம் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. அவர் சொல்லிக்கொடுத்த ஒவ்வொன்றும் இந்த படத்திற்கு பெரிய அளவில் உதவியது. இந்த படம் பலதரப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்று கேட்டால் படத்திற்கான கதைக்களம் மக்களுடைய வாழ்வியல், அரசியல் இது சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படம் அவனைவராலும் கவனிக்கப்படும் என்று நம்புகிறேன். நான் கதாபாத்திரத்திற்காக இவர்தான் நடிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட நடிகர்களைத் தேர்வு செய்யவில்லை. என்னைப்பொறுத்தவரை எல்லா கதாபாத்திரங்களையும் எல்லா நடிகர்களும் நடிக்க முடியும். ஒருவர் கேங்ஸ்டராக நடித்தால் அவர் அதை மட்டும் தேர்வு செய்து நடிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
ஆர்.ஜே பாலஜி காமெடி படத்தில் நடித்து வந்தார். அவர் கதாபாத்திரத்தை எப்படி உள்வாங்கி எப்படி வெளிப்படுத்துவார் என்ற முறையில்தான் அவரை கதாபாத்திரத்திற்கு சரியானவரா? என்று நினைக்க முடியும். படப்பிடிப்பு தளத்தில் நேரம் கிடைக்கும் போது இயக்குநராக நடிகர்களிடம் கதாபாத்திரத்தைப் பற்றி விளக்குவேன். அதை அவர்கள் உள்வாங்கி நடிப்பார்கள். இந்த கதாபாத்திரத்திற்கு இந்த நடிகர்தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. நடிகர்கள் இயக்குநர்களின் கூட்டு பங்களிப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். இதுதான் என்னுடைய நம்பிக்கை. இந்த படத்தில் சிறையில் இருப்பவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை பெரிதாக விவரிக்காமல். மனிதர்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டவர்கள் உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே நடக்கும் கதையை எமோஷ்னலாக காட்டியுள்ளோம் என்றார்.
Published on 28/11/2024 | Edited on 28/11/2024