துரோகி படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சூரரைப் போற்று' படம் 68வது தேசிய விருது விழாவில் 5 தேசிய விருதுகளை வாங்கியது. இப்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தமானார். இப்படம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து சுதா கொங்கரா, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளதாகவும் அதில் சூர்யா அல்லது அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த தகவல் தொடர்பாக சுதா கொங்கரா தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த படத்திற்காக ஆர்வம் காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
I’m a huge admirer of Mr. Ratan Tata. However I have no intention of making his biopic at this moment . But thank you all for your interest in my next film! Soon! 😊— Sudha Kongara (@Sudha_Kongara) December 3, 2022