Skip to main content

"கடன் கேட்டுத்தான் ராஜா போகக்கூடாது; வாய்ப்பு கேட்டு போகலாம்..." - சிவசங்கர் மாஸ்டருடனான 'திருடா திருடி' அனுபவம் பகிரும் சுப்ரமணியம் சிவா!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Subramaniyam Siva

 

நடன இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்பட்ட சிவசங்கர் மாஸ்டர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அண்மையில் காலமானார். இந்த நிலையில் இயக்குநர் சுப்ரமணியம் சிவா,  சிவசங்கர் மாஸ்டருடனான தன்னுடைய திருடா திருடி பட நாட்களின் அனுபவங்களை நக்கீரனிடம் பகிர்ந்து கொண்டார். 

 

"இரு முரண்பட்ட கதாபாத்திரங்களுக்கு இடையேயான படம்தான் திருடா திருடி. படம் முழுவதுமே ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். மொத்த படமுமே திருச்சியில்தான் எடுத்தோம். துள்ளுவதோ இளமை முடித்துவிட்டு காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் இந்தக் கதையை அவரிடம் சென்று சொன்னேன். படத்தில் பாடல்கள் அனைத்துமே எழுதி இசையமைக்கப்பட்டன. மன்மத ராசா பாடல்கள் தவிர்த்து மற்ற எல்லா காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் நிறைவுசெய்துவிட்டோம். எடுத்த காட்சிகள் அனைத்தையும் பார்த்துவிட்டு அந்தப் பாடல் இல்லாமலேயே படம் நன்றாக இருக்கிறது என்று அனைவரும் சொன்னார்கள். அதுவரை தமிழிலும் இது மாதிரியான பாடல்கள் எதுவும் வரவில்லை. சிலர் தெலுங்கு பாடல்போல இருப்பதாகக் கூறினார்கள். இந்தப் பாடல் வேணுமா வேண்டாமா என்று மூன்று மாதங்கள் விவாதம் போய்க்கொண்டே இருந்தது. பின், நிச்சயம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் மன்மத ராசா பாடலை படத்தில் சேர்த்தோம். சிவசங்கர் மாஸ்டர்தான் பாடலுக்கு நடனம் அமைத்தார். அந்த நேரத்தில் அவர் மிகப்பெரிய நடன மாஸ்டர். குறைந்தது பத்து நாட்களுக்கு ஒருமுறை ஆபிஸிற்கு வருவார்.

 

அவர் அடிக்கடி வருவதைப் பார்க்கும்போது எனக்கே கஷ்டமாக இருக்கும். மாஸ்டர் அந்தப் பாட்டை எடுக்கும்போது நானே உங்களை கூப்பிடுகிறேன். நான் ஒரு அறிமுக இயக்குநர். இவ்வளவு பெரிய மாஸ்டர் என்னை தேடி அடிக்கடி வருவது எனக்கு தர்மசங்கடமாக உள்ளது என்றேன். வாய்ப்பு தேடி வரும் யாரையும் வராதே என்று சொல்லாதே. ஒரு கலைஞன் அவனுக்கு வேலை இருந்தால் வேலை பார்ப்பான். வேலை இல்லையென்றால் வாய்ப்பு தேடி வருவான். நீ வேலையாக இருந்தால் வேலையாக இருக்கிறேன் என்று உதவியாளரிடம் சொல்லி கூறச் சொல். ஆனால், யார் வாய்ப்பு தேடி வந்தார்கள் என்ற விஷயம் உனக்கு தெரியவேண்டும் என்றார். அதைவிட சிறப்பாக ஒன்று கூறினார். யாரிடமும் கடன் கேட்டுத்தான் ராஜா போகக்கூடாது... வாய்ப்பு கேட்டு போறது தப்பேயில்லை என்றார். அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் இதைக் கூறியது கேட்டு எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. அதன் பிறகு என்னை சந்திக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பேன்.

 

ad

 

தனக்கு எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாததுபோல் தன்னடக்கத்துடன் இருக்கக்கூடியவர் சிவசங்கர் மாஸ்டர். நாம் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நடப்பார். அறிமுக இயக்குநர் சொல்வதை ஏன் கேட்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கமாட்டார். அதேபோல மிகவும் நன்றியுணர்வு மிக்கவர். ஆறு மாதத்திற்கு முன்புகூட என்னிடம் பேசினார். இந்தத் தலைமுறை கலைஞர்கள் என்னை ஏன் பயன்படுத்துவதில்லை. வெளிநாடுகளில் அனுபவசாலிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இங்கு ஏன் மூத்த கலைஞர்களை தவிர்க்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்பட்டார். இன்று நடைபெறும் நடன நிகழ்ச்சிகளுக்கு தன்னை ஏன் யாரும் நடுவராக அழைக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் அதிகமாக இருந்தது. திடீரென உடல்நிலை சரியில்லை என்றார்கள். நிச்சயம் மீண்டு வந்துவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன். மாபெரும் கலைஞனான அவருடைய இழப்பு சினிமாவிற்கு பேரிழப்புதான்". இவ்வாறு இயக்குநர் சுப்ரமணியம் சிவா கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்