Skip to main content

"எங்களுடைய தலைவனா வரணும்" - விஜய்யை அரசியலுக்கு அழைத்த மாணவி

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

student request vijay to enter politics

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். 

 

இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். பின்பு சாதித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். அப்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கீர்த்தி வர்மா எனும் மாற்றுத்திறனாளி மாணவர் தன் காலால் விஜய்யின் புகைப்படத்தை வரைந்த ஓவியத்தை விஜய்க்கு கொடுத்தார். 

 

பிறகு மேடைக்கு வந்த மாணவர் ஒருவர் தற்காப்பு கலை பயிற்சி செய்து காண்பித்தார். அதைப் பார்த்த விஜய் வியப்படைந்து அவரைக் கட்டியணைத்துப் பாராட்டினார். இதையடுத்து சான்றிதழை வாங்க பாட்டியுடன் வந்த மாணவி தன் வெற்றிக்கு என் பாட்டி முக்கியக் காரணம் எனக் கூறி பாட்டிக்கு சால்வை அணிவிக்கும்படி கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை நிறைவேற்றினார் விஜய். அதேபோல் மற்றொரு மாணவியும் எனது வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் எனது அப்பா, அம்மா. அவர்களுக்கும் சால்வையை அணிவிக்க முடியுமா எனக் கோரிக்கை வைக்க அதையும் நிறைவேற்றினார். இப்படி நிகழ்வில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் அரங்கத்திற்கு வெளியில் அதிக மதிப்பெண் எடுத்த தன்னை அழைக்கவில்லை என ஒரு மாணவி தனது குடும்பத்துடன் கண்ணீர் மல்க கேட்டார். 

 

இதனிடையே பரிசு பெற்ற மாணவி ஒருவர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். மேடையில் பேசிய அவர், "நா மதுரையில் இருந்து வரேன். அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய உண்மையான அண்ணாவாக என்னைக்கும் நினைப்பேன். அண்ணாவின் படம் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும் பல கோடி வசூலித்துவிடும். அவர் நடித்த படத்தில் ஒரு வோட்டா இருந்தாலும் அது எவ்ளோ முக்கியங்கிறத பத்தி பேசியிருந்தது எனக்கு ஆழமாக பதிந்துவிட்டது. அடுத்த வருஷம் நான் போடப்போற வோட்டுக்கு மதிப்பு இருக்குங்கிறத புரிஞ்சுக்கிட்டேன். அதற்கு அண்ணா வரணும். என்னுடைய வோட்டை மதிப்புமிக்க ஒன்றாக நீங்க மாத்தணும். எங்களைப் போன்று ஏழைகளுக்கு உங்களுடைய கருணை கையை கொடுத்த மாதிரி, இனி வரக்கூடிய எல்லாத்துக்கும் தனி ஒருவனாக இல்லாமல் தலைவனாக வர வேண்டும்" என தனது ஆசையை வெளிப்படுத்தினார். 

 


 

சார்ந்த செய்திகள்