மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியான படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தமிழ்நாட்டில் சில காரணங்களால் ஜனவரி 26ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் மற்றும் ஒளிப்பதிவாளராக மம்மூட்டியின் 'பேரன்பு' படத்தில் பணியாற்றிய தேனி ஈஸ்வர் உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படம் குறித்து 'சில்லுக்கருப்பட்டி', 'ஏலே' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், காட்சிகள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, "ஒரு படத்தின் அனைத்து அழகியலையும் திருடுவது ஏற்கத்தக்கது அல்ல. ஏலே படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன்முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்தப் படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயர்ச்சியைத் தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்காரர். செம்புலி இங்கே செவலை. அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலேவில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.
படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள், இவையாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்கப்பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதைப் பதிவிடுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.