தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்ட, பின்பற்றப்படும் பல சென்டிமெண்டுகள் உண்டு. அதில் ஒன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்த விநாயகர் கோவிலில் பூஜை போட்டால் படம் வெற்றி பெறும் என்பது. முன்பு பல ரஜினி படங்கள் அவ்வாறு தொடங்கப்பட்டன. நாத்திகரான கமலின் படங்களும் கூட தயாரிப்பாளர்களின் சென்டிமெண்டுக்காக அவ்வாறு தொடங்கப்பட்டது உண்டு. இது மிகச் சிறிய விசயம்தான். இது போல பல சென்டிமெண்டுகள் சினிமாவில் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும்.
சென்டிமெண்டுகளைப் போலவே பெருவாரியான ரசிகர்களைக் கவர மாஸ் ஹீரோக்கள் செய்யும் சில வியூகங்கள் உண்டு. அது, அதிக மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளை, வணங்கும் கடவுள்களை பாடல்களில் பயன்படுத்துவது. அப்படி செய்வதன் மூலம், அந்தப் பண்டிகை கொண்டாடப்படும்பொழுதெல்லாம் அந்தப் பாடல் பயன்படுத்தப்படும், அந்த நாயகன் நினைவில் இருப்பார் என்பது உண்மை. பலருக்கும் இது வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், இன்றும் புத்தாண்டு வந்தால் ஊரெங்கும், தொலைக்காட்சிகளெல்லாவற்றிலும் ஒலிக்கும் 'சகலகலா வல்லவன்' படத்தின் 'ஹேப்பி நியூ இயர்' பாடல். இந்தப் படத்தை உருவாகும்பொழுது இந்தப் பாடலுக்கு இத்தனை நீண்ட வெற்றி இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. வெளிவந்து முப்பத்தி ஐந்து ஆன்டுகளைக் கடந்தும் இந்தப் பாடல் இன்றும் புத்தாண்டுகளை கொண்டாட்டமாக்குகிறது. அதற்குப் பிறகு பல புத்தாண்டுப் பாடல்கள் வந்திருந்தாலும் இந்தப் பாடலை மிஞ்ச முடியவில்லை.
கமலுக்கு நியூ இயர் என்றால் ரஜினிக்கு ஆயுத பூஜை. 'பாட்ஷா' படத்தில் ஆட்டோக்கார மாணிக்கமாக ரஜினி நடித்தது, இந்தத் தலைமுறை ஆட்டோ ஓட்டுனர்களையும் கூட தங்களை மாணிக்கமாக எண்ணி ஸ்டைலாக செயல்பட வைக்கிறது. அந்தப் படத்தின் 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஆயுத பூஜை நாளன்று பாடப்படும் கொண்டாட்டப் பாடலாய் வரும். இன்றும் ஆயுத பூஜை அன்று 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஒலிக்காத ஸ்டான்ட் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். அதன் பிறகு விஜய் உள்பட சில நடிகர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாக நடித்திருந்தாலும் ரஜினி பதித்த அந்தத் தடம்தான் அழுத்தமாக இருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இன்னொரு பண்டிகை விநாயகர் சதுர்த்தி. ஊரெங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகருக்கு பல்வேறு உணவுப்பண்டங்களைப் படைத்து பல நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைக்கும் தமிழ் சினிமாவில் பாடல்கள் உண்டு. அதற்கு முன்பே பண்டிகை இருந்தாலும் 80களின் பின்பாதியில்தான் தெருக்களில் சிலை வைத்து விமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வழக்கம் தமிழகமெங்கும் பரவியது. 1993இல் வெளிவந்த 'உடன்பிறப்பு' படத்தில் உள்ள 'ஏ சாமி வருது' பாடல் விநாயகர் சதுர்த்தி பாடலாக தமிழகமெங்கும் ஒலித்தது. பிறகு அஜித் நடித்த 'வான்மதி' படத்தில் இடம்பெற்ற 'பிள்ளையார்பட்டி ஹீரோ' பாடல் அந்த பிளே லிஸ்ட்டில் சேர்ந்தது. அஜித்திற்கும் விநாயகருக்குமான பந்தம் 'அமர்க்களம்' படத்தின் 'மஹாகணபதி' பாடல், 'வேதாளம்' படத்தின் 'வீர விநாயகா' பாடல் என தொடர்கிறது. விநாயகருக்கான பக்தி பாடல்களே பல இருந்தாலும் சினிமா பாடல்களை பயன்படுத்தி கொண்டாடுவதில் இளைஞர்களுக்கு ஒரு விருப்பம் உண்டு. அந்த வகையில் தங்கள் ஃபேவரிட் பாடல்கள் இருந்தால் இன்னும் அதிகக் கொண்டாட்டம்தான். விஜய் நடித்த 'வில்லு' படத்திலும் விநாயகர் சதுர்த்தி பாடல் உண்டென்றாலும் அது வேறு விதமாக இருந்தது.
தீபாவளிக்கு விஜய் நடித்த சிவகாசியின் 'தீபாவளி தீபாவளி' பாடலும் அஜித் நடித்த 'அட்டகாசம்' படத்தின் 'தீபாவளி தல தீபாவளி' பாடலும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்படி பண்டிகைக் கொண்டாட்டங்களில் சினிமா பாடல்களின் இடம் முக்கியமாக இருக்கிறது. இன்று விநாயகர் சதுர்த்தி, தெருவெங்கும் 'வீர விநாயக வெற்றி விநாயக...' ஒலிக்கிறது.