பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களின் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராகியுள்ளார் ராஜமௌலி. இதில் ஆர்.ஆர்.ஆர் படம் இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட 13 படங்களில் ஒன்றாகும். ஆனால் இறுதியில் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வுபெற்றது. இதனை தொடர்ந்து ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. மேலும் இப்படம் பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக ராஜமௌலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஜமௌலி பிரபல ஹாலிவுட் நிறுவனமான 'கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்சி' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். அந்நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவது மற்றும் சந்தைபடுத்வது போன்ற பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் ராஜமௌலி ஒப்பந்தம் செய்துள்ளார். அதன் படி ராஜமௌலி இயக்கும் படங்களை ஹாலிவுட்டில் சந்தை படுத்தும் பணிகளை இந்நிறுவனம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு ஆர்.ஆர்.ஆர் பட வெற்றியும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. எனவே ஹாலிவுட் திரையுலகிலும் ராஜமௌலியின் அடுத்த படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ராஜமௌலி, ஹாலிவுட்டில் நேரடியாக படம் எடுப்பதை விட இந்திய படங்களை அங்கு கொண்டு செல்வதே என் இலக்கு என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.