Skip to main content

“சினிமா என்பது கோயில்” - நியூயார்க்கில் விருது பெற்ற ராஜமௌலி

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

SS Rajamouli gets Best Director at New York Film Critics Circle

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 95 வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போட்டிக்கு குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானது. இருப்பினும்,  ஆர்.ஆர்.ஆர்.  படக்குழு தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்தனர். 

 

இதையடுத்து ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில்  'நாட்டு நாட்டு' பாடல் நாமினேஷனுக்கான முந்தைய இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு முக்கியமான சில விருதுகளையும் வாங்கியுள்ளது. 

 

அந்த வகையில் ஆஸ்கருக்கு இணையாக திரைத்துறையில் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு, ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படம் தேர்வானது. இந்த விழா வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதில் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ராஜமௌலி தேர்வாகியிருந்தார். இந்நிலையில், நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது விழா நடைபெற்றது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு சிறந்த இயக்குநருக்கான விருதை ராஜமௌலி பெற்றார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். 

 

பின்பு மேடையில் பேசிய ராஜமௌலி, "சினிமா என்பது கோயில் போன்றது. ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இந்தியாவில் எப்படி வரவேற்பு இருந்ததோ, அதே வரவேற்பு மேற்கத்திய நாடுகளில் இருக்கிறது" என்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே ராஜமௌலிக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்