Skip to main content

தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டிற்கு தயாராகும் ஸ்ரீதிவ்யா!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

Sri Divya

 

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து 2013 -ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வசூலை வாரிக்குவித்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.

 

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த, 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் மூலம், ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறிய ஸ்ரீதிவ்யாவிற்கு, அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகுவிந்தன. அதில், 'காக்கிச்சட்டை', 'ஜீவா', 'ஈட்டி' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர், 2017 -ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

 

பல இளம் கதாநாயகிகளின் வருகையைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்தநிலையில், 3 வருடத்திற்குப் பிறகு, அவர் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 'பானா காத்தாடி' படத்தின் இயக்குனரான பத்ரி, நடிகர் கவுதம் கார்த்திக்கை வைத்து இயக்கவுள்ள படத்தில், ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் தொடங்கவுள்ளது.  

 

இதைத் தவிர மேலும் சில படத்தில், ஸ்ரீதிவ்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக வெளியாகும் தகவல்கள், தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டிற்கு ஸ்ரீதிவ்யா தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்