அருவி, என் ஜி கே, கைதி உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம்வருகிறது ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கணம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அம்மா பாசத்தை மையப்படுத்தி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கி வருகிறார். எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்கிறார். சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அமலா, இப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படம் குறித்து இயக்குநர் ஶ்ரீகார்த்திக் கூறுகையில், "எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்துவிட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்தக்கணம் உருவான கதை தான் இந்த 'கணம்'. இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு, சயின்ஸ் ஃபிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக உருவாக்கியுள்ளேன். இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து, வித்தியாசமான கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபு சாரை கலங்கடிக்க வைத்துவிட்டது.
கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த அவர் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும், இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று படத்தை பிரம்மாண்டமாக வடிவமைக்க தொடங்கினார். இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு தனது நண்பரான எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்தை அணுகி அவரை நாயகனாகவும் ஆக்கியுள்ளார். இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக விளங்கிய அமலா நடித்துள்ளார். 25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு, இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ரசிகர்கள் கொண்டாடும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்கும்" எனக் கூறினார்.