திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் (நேற்று) ஜூலை 2ஆம் தேதி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவுசெய்யக் கடைசி நாளாகும்.
இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்... "ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாண்மையை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது. இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் அருவி, ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!! " என பதிவிட்டுள்ளார்.