Skip to main content

“ஏதோ போனா போகுதுன்னு விட்டு வச்சிருக்கோம்”- இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், இயக்குனர் கௌதமன், பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

muthuramana

 

 

அப்போது பேசிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், “மேடையிலேயே பல பேச்சுக்கள் வந்தது கமர்ஷியல் படம், கலைப்படம் என்றெல்லாம். நான் பண்ணாத கமர்ஷியல் படங்களா? நாண் பண்ணாத கலைப் படங்களா? நான் திருமாவளவன் மேடையிலும் கலந்துகொள்வேன், இல. கணேசன் மேடையிலும் கலந்துகொள்வேன். அதனால் பொதுவானவனாக நான் பேசுகிறேன் கமர்ஷியல் படங்களுக்கு எவ்வளவு ஒத்துழைப்பு தருகிறீர்களோ அதே அளவிற்கு இந்த படத்திற்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன். 

ஞானச்செருக்கு இது படைப்பாளர்களுடைய செருக்கு. இந்த செருக்கெல்லாம் எனக்கு இல்லை, ஆனால் இந்த இளைஞர்களுக்கு இருக்கின்றது. அதை பாராட்டதான் நான் வந்திருக்கிறேன். 

இங்கு எல்லாம் பேசிக்கொண்டிருக்கும்போது தலைமுறை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்ன வயது 85, உடல்படி எனக்கு வயது 55, மனதின்படி எனக்கு 35, இந்த இளைய தலைமுறையினரையும் நிகழ்ச்சி வந்த சந்தோஷத்தில் தற்போது வயது 18. ஏன் சொல்கிறேன் தெரியுமா? இந்த படத்தில் வரும் இயக்குனர் நான் மீண்டும் வெற்றி படத்தை கொடுத்தே தீர்வேன் என்கிற லட்சியத்தோடு நடித்திருப்பதுதான் இந்த படத்தின் கதை. எனக்கு இந்த செருக்கெல்லாம் சுத்தமாக கிடையாது. ஆனால், இன்றைக்கு சொல்கிறேன் இந்த படத்தையும் அந்த லட்சியத்தையும் பார்த்த பிறகு மீண்டும் ஒருமுறை வரவேண்டும் என்று எண்ணம் வருகிறது. இந்த படம் தூண்டுகிற விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உள்ளது. 

இதன் மூலமாக ஒரு பாடம் கற்றுக்கொள்கிறேன். ‘ஏன் அடங்கிப்போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறாய், ஏன் பயப்படுகின்றாயா இந்த பசங்களை எல்லாம் பார்த்து’ அதுதான் இல்லை, இன்றைக்கு இவர்கள் கிராஃபிக்ஸில் செய்யும் வேலைகளையெல்லாம் ராஜா சின்ன ரோஜா படத்தில் அனிமேஷனை வைத்து செய்திருக்கிறேன். அன்றைக்கே அவ்வளவு செய்திருக்கும் நான் இன்று வந்து இந்த கிராஃபிக்ஸை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்வேன் என்று பாருங்கள். ஏதோ போனா போகுது என்று விட்டு வைத்திருக்கிறோம். போதும் ஆடியது ஆடியாச்சு, பாடியது பாடியாச்சு... எல்லாம் பண்ணியாச்சு என்கிற சோர்வு அவ்வளவுதான் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால், இந்த படம் பார்த்த பிறகு மீண்டும் எனக்கொரு லட்சியம் எழலாம் அந்தளவிற்கு படம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது” என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்