கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென பாடகர் எஸ்.பி.பி. கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.
இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். மேலும் எஸ்.பி.பி.யின் உடல் நலம் குறித்து அவ்வப்போது வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் எஸ்.பி.பி. உடல்நல முன்னேற்றம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...
"இது தாமதமான தகவல்தான். ஆனால் மருத்துவ குழுவினரிடமிருந்து நாங்கள் முழுமையான தகவலை பெற விரும்பினோம். இன்று ஞாயிற்றுக்கிழமை அப்பா மூன்றாவது தளத்திலிருந்த ஐசியூவில் இருந்து, ஆறாவது தளத்திலிருந்த தனிப்பட்ட ஐசியூவில் மாற்றப்பட்டார். இதுவும் தாமதத்துக்கு காரணம். மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் அப்பாவின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பா மருத்துவர்களிடம் தம்ப்ஸ் அப் குறியைக் காட்டுகிறார். அவருக்கு மருத்துவர்களை அடையாளம் தெரிகிறது. ஆனால் இன்னும் வெண்டிலேஷனில் தான் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சற்று நல்லபடியாக மூச்சு விடுகிறார். இதை ஒரு நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள். அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.
மருத்துவ குழுவினர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர் முழுமையாக குணமடைய நீண்ட நாட்கள் ஆகும். நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் இது ஒரு நாளிலோ இரண்டு நாட்களிலோ நடந்துவிடாது, ஒரு வாரம் கூட ஆகலாம். ஆனால் நிச்சயமாக விரைவாக குணமடைந்து வீடு திரும்புவார். அவர் நல்ல படியாக இருப்பதில் எங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர் முழுமையான மயக்கத்தில் இல்லை, அவரால் பிறரை அடையாளம் காணமுடிகிறது. தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம். உங்களுடைய அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நானும் என் குடும்பத்தினரும் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். என் அம்மாவும் தற்போது குணமடைந்து வருகிறார். செவ்வாய் அல்லது புதன் அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இதுவும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. அவரை தொடர்ந்து விரைவில் அப்பாவும் வீடு திரும்புவார்" என கூறியுள்ளார்.