சண்டக்கோழி, சென்னை 600028 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவா படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கினார். அதன் பிறகு எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சௌந்தர்யா, தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து, 'கேங்க்ஸ்' என்ற தலைப்பில் வெப் தொடருக்கு ஷோ ரன்னராக பணியாற்றுகிறார்.
இதையடுத்து மூன்றாவது முறையாக ஒரு படம் இயக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. பின்பு ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் 43வது திருமண நாள் கொண்டாடியுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது புகைப்படங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “43 ஆண்டுகள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்கிறார்கள். 43 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா மாற்றிக் கொண்ட செயின் மற்றும் மோதிரங்களை ஒவ்வொரு ஆண்டும் அப்பாவை அன்புடன் அணியச் செய்கிறார். உங்கள் இருவரை மிகவும் நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ரஜினிகாந்த் - லதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.