ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'கடுவா'. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தில் மாற்றுத்திறனாளி குறித்து, "மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதோடு இயக்குநர் ஷாஜி கைலாஸ், உள்ளிட்ட படக்குழுவினருக்கு கேரள மாற்றுத்திறனாளி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஷாஜி கைலாஸ் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் மாற்றுத்திறனாளி ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். இது குறித்து ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் இயக்கிய கடுவா படத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திரைக்கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானோ அதன் மற்றொரு பக்கம் பற்றி யோசிக்காமல் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை" என்று விரிவாக சில நிகழ்வுகளை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து படக்குழு, படத்தில் மாற்றுத்திறனாளி குறித்து இடம்பெற்ற வசனங்களை நீக்கக்கோரி சென்சார் போர்டு குழுவிடம் விண்ணப்பிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.