சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் வருகிற 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் மற்றும் கதாநாயகன் சூரியை சந்தித்தோம். அப்போது சூரி, தனது வாழ்க்கை அனுபவங்களையும், சினிமா அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
சூரி பேசுகையில், “இந்த படத்திற்கு பல சர்வதேச விருதுகள் கிடைத்திருக்கிறது. தற்போது இந்தியாவில் தேசிய விருதும் கிடைக்கும் என நம்புகிறோம். இதற்கு முன்பு நான் கதையின் நாயகனாக இருந்தேன். ஆனால், இந்த படத்தில் பாண்டி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். பாண்டியை பொறுத்தவரை அவன்தான் கதாநாயகன். அதனால் அதையும் நான் அப்படியே ஏற்றுக் கொண்டு நடித்தேன். இந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பெரும்பாலும் மக்களுடன் தொடர்புள்ள கதையைத்தான் தேர்ந்தெடுப்பேன். அப்படித்தான் பாண்டியை பற்றி கேட்டவுடனேகொட்டுக்காளி. படத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் பொதுவாகத் தேவையானதிற்கு மட்டும்தான் செலவு செய்வேன். மற்றபடி எனக்கு ஆடம்பரம் தேவையில்லை. அது பத்து ரூபாய் பொருளாக இருந்தாலும் சரி பத்தாயிரம் ரூபாய் பொருளாக இருந்தாலும் சரி. இப்போது எல்லாமே வசதியாக இருந்தாலும் கூட அதே கஞ்சத்தன சூரியாகத்தான் இருப்பேன். அது இயற்கையான ஒன்று. கதையின் நாயகனாக நான் மாறிய பிறகு சூரி சார், சூரி ப்ரோ, சூரி அண்ணே, மேலும் சில இடங்களில் சூரி தம்பி எனச் சொல்லுவார்கள். ஆனால் திடீரென ஒரு கால் வரும் அதில் ‘டேய் 100 கால் பண்ணிட்டேன் எடுக்க மாட்டியாடா?’ என சிலர் கேட்கும் போது மனதிற்கு நிறைவாக இருக்கும். வீட்டில் என்னை ‘டா’ என்று தான் கூப்பிடுவார்கள், இருந்தாலும் வெளியில் அப்படி என்னை யாரும் சொல்வதில்லை என்ற ஏக்கம் இருக்கும். இப்போதைக்கு என்னுடைய பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் மட்டும்தான் அப்படி என்னை அழைப்பார். மற்றபடி எப்பவும் உறவினர்கள் அப்படியேதான் பழகுகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இயக்குநர், டெக்னீசன், நடிகர்கள் என அனைவரும் நம்ம மக்கள்தான். ஆனால் அதைத் தாண்டி இந்த படத்திற்காக படப்பிடிப்பு நடத்திய ஊரில் கேமரா அனுபவம் இல்லாத மக்களுடன் சேர்ந்து நடிப்பதில் சந்தோஷமாக இருந்தது. அவர்களிடமிருந்துதான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள்தான் எனக்கு வாத்தியாராகத் தெரிந்தார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் இந்த பாண்டி கேரக்டர் சினிமாவே தெரியாதவனாக இருக்க வேண்டும். அதாவது 15 வருட சினிமா அனுபவம் இல்லாத சூரியாக அங்கு இருக்க வேண்டும். இந்த கதைக்கு பொருத்தமானவர்கள் அந்த மக்கள்தான். நானும், அன்னா பென்னும் வெறும் நடிகர்கள்தான். அதனால் எனக்குதான் அந்த கேரக்டர் கஷ்டமாக இருந்தது. நான் ஒரு நடிகர், அதனால் எனக்கு கேமரா பார்த்து நடிக்கவும், பேசவும் தெரியும் என்று நினைத்து நடித்தால் கதையே செத்து போகிவிடும். அதனால் நான் அவர்களின் யதார்த்தத்தை பின் தொடர ஆரம்பித்தேன்” என்றார். மேலும் அன்னா பென்னுடன் இணைந்து நடித்ததை பற்றி பேசுகையில், “எனக்கு இந்த படத்தின் மூலமாகத்தான் அவர் அறிமுகமானார். அற்புதமான நடிகை. நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இந்த படத்தில் அவருக்கு டயலாக் இல்லை என்றாலும் பிரமாதமாக நடித்திருந்தார்” என்று பதிலளித்தார்.