
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கினார். மும்பை - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த போது அவரது கார் டிரக் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சோனாலி சூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு டிஸ்சார் ஆனார். இவரோடு காரில் பயணித்த இவரது சகோதரி மகன் மற்றும் உறவினர் ஒருவரும் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி கடும் சேதமடைந்தது. இதையடுத்து கணவர் சோனு சூட் இந்த விபத்தில் தனது மனைவி உயிர் பிழைத்தது பெரிய விஷயம் என்று கூறியிருந்தார்.
இந்த விபத்தை மேற்கோள்காட்டி சீட் பெல்ட் அணியும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சோனு சூட் இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ஒரு முக்கியமான மெசேஜ். கார் விபத்தில் எனது மனைவி மற்றும் உறவினர்களை காப்பாற்றியது சீட் பெல்ட் தான். இது அனைவருக்கும் தெரியும். பொதுவாக காரில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள், சீட் பெல்ட் அணிவதே இல்லை. விபத்தன்று, என் மனைவி பின் சீட்டில் அமர்ந்திருந்த என் உறவினர் பெண்ணை சீட் பெல்ட் அணியச் சொல்லியிருக்கிறார். அவர் அணிந்த ஒரு நிமிடத்தில் விபத்து நடந்தது. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் மூவரும் பாதுகாப்பாக உயிர்தப்பினர்.
பின் சீட்டில் அமர்ந்திருக்கும் 100 பேரில் 99பது பேர் சீட் பெல்ட் அணிவதே இல்லை. அவர்கள் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என நினைக்கிறார்கள். அதே நேரம் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களும் சீட் பெல்டை அணிந்தாலும் சரியாக அதை லாக் செய்வதில்லை. போலீஸிடம் மட்டும் தப்பித்தால் போதும் என சீட் பெல்ட் போடுவது மாதிரி காண்பித்துக் கொள்கிறார்கள். ஆகையால் எல்லோரும் சீட் பெல்ட் அணியாமல் காரில் உட்கார வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.