
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் பெருவாரியான அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “ஒரு அஜித் ரசிகராக இல்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் என்ன பண்ணியிருப்பேன் எனத் தெரியவில்லை. எதோ ஒரு வேலையை செய்திருப்பேன். ஆனால் அஜித் ரசிகராக இருந்ததால் என்ன நடக்கும் என்பதை இந்த தருணத்தில் புரிந்து கொண்டேன். என்றைக்குமே அஜித்துக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். என்னுடைய முந்தைய படங்கள் சரியாக போகவில்லை. ஆனால் அஜித் அதையெல்லாம் பார்க்கவில்லை. ஒரு சக மனிதராகத்தான் பார்த்தார். அதை என்னிடம் எப்படி பார்த்தார் எனத் தெரியவில்லை. இதைப் பற்றி அவரிடம் கேட்ட போது சிரித்துக் கொண்டே போய்விட்டார்.
இந்த படம் இவ்வளவு எனர்ஜியாக இருப்பதற்கு அஜித்தான் காரணம். முதல் நாள் ஷுட்டிங் முதல் கடைசி நாள் டப்பிங் வரை அவருடைய முழுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். படத்தின் தலைப்பே அவர் சொன்னதுதான். அவர் இப்போது ரேஸில் பிஸியாக இருப்பார். அவருக்கு என் அன்பை சொல்லிக் கொள்கிறேன். லவ் யூ சார். என் மனைவி ஐஸ்வர்யாவை விட உங்களிடம் தான் அதிக லவ் யூ சொல்லியிருக்கிறேன். அது உண்மை. என்னுடைய குடும்பத்தை அடுத்து என் பெற்றோரை அடுத்து நீங்கள் தான் முதலில் வருவீர்கள்” என்றார்.
தொடர்ந்து படக்குழுவினரின் உழைப்பு குறித்து பேசிய அவர் ஒவ்வொருத்தருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது படத்தின் தமிழக விநியோகிஸ்தர் ராகுல் குறித்து பேசுகையில், “ராகுல் என்னுடைய காலேஜ் சீனியர். வலிமை படத்துக்கு டிக்கெட் கொடுக்கிறேன் என சொல்லி காலை 4 மணி வரையும் என்னை ஏமாற்றிவிட்டார்” என்றார். இறுதியில், “ஒரு போஸ்டர் ஒட்டின பையன், இங்கே நின்னு பேசுகிறான் என்றால் வாழ்க்கையில் எல்லாராலையும் முடியும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.