கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தும் பணிகளில் அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது பரவி வரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து நடிகர் சோனு சூட் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "காலை முதல் என்னுடைய அலைபேசியை கீழே வைக்கவில்லை. இந்தியா முழுவதும் இருந்து மருத்துவமனை படுக்கை, மருந்துகள், ஊசிகள் வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இதில், நிறையே பேருக்கு இன்னும் உதவிகள் வழங்காததால் நிர்க்கதியாக இருப்பது போல உணர்கிறேன். தற்போதைய சூழல் பயமுறுத்துகிறது. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். மாஸ்க் அணிந்து தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் இணைந்து பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். இது குறை சொல்வதற்கான நேரமல்ல. மருத்துவ உதவிகள் கிடைக்காதவர்களுக்கு உதவ முயலுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சோனு சூட் இந்தப் பதிவை நேற்று (16.04.2021) இரவு பதிவிட்டுள்ள நிலையில், இன்று காலை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.